ரஸ்யா படையினரை மீளப் பெறவில்லை : அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு
உக்ரேய்ன் எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தியிருந்த தனது நாட்டு படையினரை ரஸ்யா மீளப் பெற்றுக்கொள்ளவில்லை என அமெரிக்காவும் நேட்டோ கூட்டுப்படையும் தெரிவித்துள்ளன.
தமது நாட்டு படையினரை வாபஸ் பெற்றுக் கொள்வதாக ரஸ்யா அறிவித்த போதிலும் உண்மையில் அவ்வாறு படையினர் வாபஸ் பெற்றுக்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உக்ரேய்ன் பாதுகாப்பு அமைச்சின் மீது வரலாறு காணாத அடிப்படையில் சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இந்தக் குற்றச்சாட்டையும் ரஸ்யா நிராகரித்துள்ளது. உக்ரேய்ன் எல்லைப் பகுதியில் நிலை கொண்டிருந்த படையினர் அங்கிருந்து மீளப் பெற்றுக்கொள்ளும் காணொளிகளையும் ரஸ்யா வெளியிட்டிருந்தது.
எனினும், ரஸ்ய படையினர் எல்லைப் பகுதியில் தொடர்ந்தும் குவிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் அன்தனி பிலின்கன் தெரிவித்துள்ளார்.
ரஸ்யா சொல்வதொன்று செய்வதொன்று என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
படையினர் மீளப் பெற்றுக்கொள்வதனை அவதானிக்க முடியவில்லை எனவும், முக்கிய இராணுவ அலகுகள் எல்லை நோக்கி நகர்வதனையே அவதானிக்க முடிகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எந்த நேரத்திலும் ரஸ்யா உக்ரேய்ன் மீது படையெடுக்கும் சாத்தியம் உண்டு என மேற்குலக நாடொன்றின் சிரேஸ்ட புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்யா படையினரை மீளப் பெற்றுக்கொண்டமைக்கான சான்றுகள் எதுவும் இல்லை என நேட்டோ கூட்டுப் படைகளின் செயலாளர் நாயகம் ஜென்ஸ் ஸ்டொலன்பெர்க் தெரிவித்துள்ளார்.
படைக் குவிப்பினை மேற்கொள்வதாகவும் எல்லைப் பகுதி மீது கூடுதல் எண்ணிக்கையில் படையினர் நகர்த்தப்படுவதனையுமே அவதானிக்க முடிகின்றது என தெரிவித்துள்ளார்.