தமிழர்களுக்கு எதிரான தேரரின் இனவாத பேச்சு! சட்ட நடவடிக்கை கோரும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் (Video)
நான் கூறிய வார்த்தைகளுக்காக எனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமாயின் எனது தாயின் கல்லறையை சேதப்படுத்தியவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
தனது முகப்புத்தக பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தனது தாயின் கல்லறை உடைக்கப்பட்டதாக தெரிவித்து கத்தி கூச்சலிட்டதுடன், தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என பகிரங்க அச்சுறுத்தலை அம்பிட்டியே சுமனரத்ன தேரர் விடுத்திருந்தார்.
குறித்த கருத்துக்கு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினராலும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வந்ததுடன் தேரருக்கு எதிராக பல முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
தனது கருத்துக்களை நியாயப்படுத்தும் வகையிலும், அதற்கு மன்னிப்பு கேட்கும் வகையிலும் அம்பிட்டிய தேரர் காணொளி வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், அவர் இறுதியாக வெளியிட்டுள்ள காணொளியில், எனது கருத்துக்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் தொடரும் பிரச்சினைகள் தொடர்பில் அதிகளவானோர் அவதானித்து கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. பலர் என்னை திட்டுகிறார்கள்.
எனினும், இந்த விடயத்தின் உண்மையை அறிந்தவர்கள் சிலரே. இலங்கையில் நீதி தவறான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதால் எதிர்பாராத பல நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நீதியை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள மயானம் கனரக இயந்திரம் கொண்டு அண்மையில் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது. இதன்போது, குறித்த இடத்துக்கு சென்ற நான் சில வார்த்தைகளை கூறியிருந்தேன். இதனை அடிப்படையாக கொண்டு பலர் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
இந்த நிலையில், தற்போது குறித்த மயானத்தை சுத்தப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது எனது தாயின் சமாதி சேதமடைந்ததாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றில் கூறியுள்ளார். இந்த விடயத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் அனைத்து தரப்பினரையும் பாதுகாக்கும் வகையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செயல்பட்டுள்ளார்.
இவ்வாறாக நீதி நிலைநாட்டப்படாத நிலை உருவாகாது இருந்திருந்தால் நான் தேவையற்ற வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
எனது வார்த்தை பிரயோகங்கள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாயின், எனது தாயின் சமாதியை உடைத்தவர்களுக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இந்த நிலையில், இருதயபுரத்தில் உள்ள மயானம் தொடர்பில் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட போலியான விடயங்கள் மற்றும் மட்டக்களப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரியின் நடவடிக்கைகள் தொடர்பில் உடனடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோருகிறேன் குறிப்பிட்டுள்ளார்.