சிறைக்கைதிகளை மிருகங்கள் போன்று நடத்த வேண்டாம் - கொழும்பு பிரதான நீதவான் எச்சரிக்கை
"சிறைக் கைதிகளும் மனிதர்கள்" என்பதை வெறும் கோஷமாக மட்டும் கொள்ளாது அவர்களையும் மனிதர்களைப் போன்று நடத்துங்கள் என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் தெரிவித்துள்ளார்.
கைதிகளை மிருகங்கள் போன்று ஒற்றை சங்கிலியில் பிணைத்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டாம் என அவர் நேற்று (21.03.2023) திறந்த நீதிமன்றில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு கடுமையாக எச்சரித்துள்ளார்.
அத்துடன், ஒற்றைச் சங்கிலியில் ஏராளம் சிறைக் கைதிகள் பிணைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட சம்பவத்தையடுத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலை உத்தியோகஸ்தர்
சுகாதார குறைபாடுகள் கொண்டுள்ள, சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்ட வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சந்தேக நபர்களை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைவிலங்கு மற்றும் சங்கிலியால் பிணைத்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த சந்தர்ப்பத்திலேயே சந்தேகநபர்களை மிருகக்கூட்டம் போல் இதன் பின்னர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து முன்னிலைப்படுத்த வேண்டாம் எனவும், நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளை கடுமையாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.