மேலும் தரமிறக்கப்பட்ட இலங்கை! உலகிற்கு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது
கடந்த வாரம் பிட்ச் ரேட்டிங் நிறுவனத்தினால் இலங்கை மீண்டும் தரமிறக்கப்பட்டுள்ளது. இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது என்பதை உலகிற்கு மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த தரப்படுத்தல் அமைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாள் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் முயற்சி வெற்றியளிக்கவில்லை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த நாம் தயாராகவுள்ளோம் என்ற செய்தியை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளோம். எமது மாநாட்டில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் கொண்டு , அவர்கள் எந்த மாற்றத்தை விரும்புகின்றனர் என்பது தெளிவாகத் தெரிந்திருக்கும்.
கடந்த வாரம் பிட்ச் ரேட்டிங் நிறுவனத்தினால் இலங்கை மீண்டும் தரமிறக்கப்பட்டுள்ளது. இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது என்பதை உலகிற்கு மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த தரப்படுத்தல் அமைந்துள்ளது.
எனினும் இந்த நிலைமையிலிருந்து நாட்டை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.
இம்மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும் இதுவரையில் அதற்கான எவ்வித சாதகமான சமிஞ்ஞையும் தென்படவில்லை. இதற்காக அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை.
பொருளாதார மறுசீரமைப்பில் அரசாங்கத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, இலாபமீட்டும் நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் பொறுத்தமற்றது.
இலாபமீட்டும் நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கு பதிலாக அரச - தனியார் கூட்டு முயற்சியில் நஷ்டமடையும் நிறுவனங்களை மறுசீரமைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.