புதிய அமைச்சர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்!
புதிய அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
குற்றச்சாட்டுகள்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,'' புதிய அமைச்சர்கள் கடமைகளை ஆரம்பித்து ஐந்து வாரங்கள் மாத்திரமே நிறைவுப் பெற்றுள்ளது.
அமைச்சர்களை நேரில் சந்திப்பதற்கு வாய்ப்பளிக்கவில்லை, அவர்கள் தொலைபேசியில் உரையாடுவதில்லை, ஊடக அறிக்கைகளை வெளியிடுவதில்லை, நேர்காணல்களை வழங்குவதில்லை என குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது.
எவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் இலங்கை அரசுக்கு ஓர் சிறந்த அடித்தளத்தை அமைக்கும் பணியை நிறைவேற்றுவதற்கு எமது அமைச்சரவை அயராது உழைத்து வருவதை நான் பொறுப்புடன் கூற கடமைப்பட்டுள்ளேன்.
தன்னிச்சையான முடிவு
கடந்த அரசாங்கத்தில் இவ்வாறு அர்ப்பணிப்பின்றி முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் தரவுகள் மற்றும் தகவல்கள் இன்றி, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் போன்றோர் பதவிவகித்தமையாலும், தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டமையாலும் உருவாக்கிய நெருக்கடிகளுக்கு இந்நாட்டு மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் இந்நாட்டு மக்கள் பெரும்பான்மை பலத்தை எமக்கு வழங்கியுள்ளனர்.
இந்த ஐந்து வருட காலப்பகுதியில் நாட்டை முன்னேற்றாமல் ஏனைய அரசாங்கத்தைப் போல வேறு ஏதேனும் விடயங்களை மேற்கொள்ள முடியும். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அரசாங்கத்தால் முன்னேறிச் செல்வது எளிதான விடயம் எனினும் நாடு ஒருபோதும் முன்னேறாது.'' என தெரிவித்துள்ளார்.