தேசிய நல்லிணக்கத் திட்டம் தொடர்பான சர்வ கட்சி மாநாடு இன்று
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இன்று (26.07.2023) இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு வருகை தருமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் போது தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் குறித்து அரச தலைவர் அவர்களுக்கு விளக்கமளிப்பார் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஜனாதிபதி விக்ரமசிங்க இந்தியாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டதையடுத்து, அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தம்
அத்துடன் இரு தலைவர்களுக்கிடையிலான பரந்த பேச்சுவார்த்தைகளில் தமிழர்கள் பிரச்சினை முக்கியமாக இடம்பெற்றுள்ளது.
இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் (13A) நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இந்தியப் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் கொண்டுவரப்பட்ட 13ஏ சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது.
13ஏ தமிழ் சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வை வழங்குகிறது.
13ஆவது திருத்த சட்டம்
இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தற்காலிக இணைப்புடன் ஒன்பது மாகாணங்களை பகிர்ந்தளிக்கப்பட்ட அலகுகளாக உருவாக்கியது.
தனது இந்திய விஜயத்திற்கு முன்னதாக, தமிழ் கட்சிகளுடனான சந்திப்பில், மாகாண சபைகளில் பொலிஸ் அதிகாரங்கள் இன்றி 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |