நாடளாவிய ரீதியில் அனர்த்த நிலையை எதிர்கொள்ள தயார் நிலையில் முப்படையினர்
தற்போது நிலவும் வானிலை காரணமாக நாட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு அனர்த்த நிலைமையையும் எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், முப்படையினர் மற்றும் பொலிஸார் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தேவையான அனைத்து முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க இதுகுறித்து மேலும் குறிப்பிடுகையில்,
அனர்த்தம் தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்பட்டவுடன் அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
தற்போது நிலவும் வானிலை காரணமாக காடுகளுக்கு சுற்றுலாப் பயணம் செல்லுதல், மலையேறுதல், ஆற்றில் நீராடுதல், படகு சவாரி செய்தல் போன்ற செயற்பாடுகளைத் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
இந்நிலையில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றாமல், சட்டவிரோதமான பயணங்களை மேற்கொண்டு மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போதைய அனர்த்த நிலைமை மற்றும் கோவிட் பரவலைக் கருத்திற் கொண்டு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் 9 நிவாரண நிலையங்களில் 63 குடும்பங்களைச் சேர்ந்த 251 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்குத் தேவையான அனைத்து நிவாரணங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.




