இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உள்ளிட்டவர்கள் வழக்கில் இருந்து விடுதலை (Photo)
மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை கள்ளியங்காடு இந்துமயானத்தில் புதைத்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்ட 5 நபர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உட்பட ஐந்து பேரையும் தொடரப்பட்ட வழக்கில் இருந்து நேற்று (31.10.2022) விடுதலை செய்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் வழக்கு
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த 2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியைச் சேர்ந்த தற்கொலை குண்டுதாரியான அசாத்தின் உடற்பாகம் கள்ளியன்காடு இந்து மயானத்தில் பொலிஸாரால் புதைக்கப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக கடந்த 2019 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 திகதி இராஜாங்க அமைச்சர் உட்பட பலர் கல்லடி பாலத்தினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி வெளியேற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உள்ளிட்டவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளாக வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்தது. இந்த நிலையில் குறித்த வழக்கு நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பீற்றர் போல் முன்னிலையில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது.
இதன் போது, வழக்கு விசாரணைக்கு பொலிஸார் தரப்பினர் சமூகமளிக்காதமையையிட்டு அமைச்சர் உள்ளிட்டவர்களை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து, வழக்கை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார்.