மக்களை முட்டாளாக்கும் முசரப் எம். பி: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குற்றச்சாட்டு
மக்களை மடையர்களாக்கும் முசரப் போன்ற சில நபர்களால் ஏனைய ஊடகவியலாளர்களுக்கு அவமானமே ஏற்படுகின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்
நாட்டின் 65 இலட்சம் மக்கள் வாக்களித்தமையால் இன்று ஒட்டுமொத்த மக்களும் வீதியில் வந்து நிற்கின்றனர். இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த அரசாங்கம் சிலருக்கு அமைச்சு பதவிகளையும் வழங்கியது.
இந்தசமயத்தில் 20 ஆம் திருத்தத்திற்கு வாக்களித்து இந்த நாடு நாசமாவதற்கு பங்களித்த ஒரு சில முஸ்லிம் ஆசாமிகள் பற்றி நாம் சொல்ல வேண்டும். அவர்கள் றிசாட் பதியூதீன் என்ற நாமத்தை வைத்தே தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அவர்களது சொந்த முகவரிகளால் வெற்றிபெறவில்லை.
ஆனால் இன்று றிசாட் பதியூதீன் சொன்னமையாலேயே தாங்கள் 20 ஆம் திருத்ததை ஆதரித்தோம் என்று சொல்கிறார்கள். இப்படிக்கூறுவதற்கு வெட்கமில்லையா உங்களிற்கு. எமது தலைமை உண்மையும் நேர்மையும் கொண்டது.
மக்களை மடையர்களாக்கும் முசரப் போன்ற சில நபர்களால் ஏனைய ஊடகவியலாளர்களுக்கு அவமானமே ஏற்படுகின்றது. முன்னுக்கு பின் முரணான விடயங்களைத்தான் நீங்கள் முன்வைக்கின்றீர்கள்.
அன்று மொட்டுக்கு வாக்களிக்கவேண்டாம் என்றவர் இன்று மொட்டுக்கு முட்டுக்கொடுகின்றார். இன்று எமது தலைமையை ஏமாற்றியவர் நாளை அவர் வாக்களித்த மக்களையும் ஏமாற்றுவார்.
இந்த கட்சியை வளர்ப்பதற்கு நாங்கள் பட்ட பாட்டினை நீங்கள் அறிவீர்களா. நான் சவால் விடுக்கின்றேன் றிசாட் பதியூதீன் என்ற நாமம் இல்லாமல் நீங்கள்மக்களிடம் சென்று வாக்கினை கேட்டு வென்றுபாருங்கள், இவர்களது அமைச்சுப்பதவியும் நாடாளுமன்ற உறுப்புரிமைகளும் இன்னும் சொற்பகாலம் தான் என்பதே உண்மை.
அதேபோல நாட்டின் பொருளாதாரம் படுகுழிக்குள் விழுந்து சின்னபின்னமாகி இருக்கும் நிலையில் காதர் மஸ்தானுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டது. உங்களுக்கு வெட்கம் இல்லையா அந்த அமைச்சினை பெற்றதற்கு.மக்கள் வீதிகளில் நிற்கும் போது உங்களுக்கு அமைச்சுப்பதவிகள் தேவைதானா” என்றனர்.
குறித்த ஊடகசந்திப்பில் வவுனியா நகரசபை உறுப்பினர்களான முகமட் லரீப், அப்புதுல்பாரி, மற்றும் கட்சியின் முக்கியஸ்தர் கனீபா முகைதீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.