அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்
அல்கொய்தா அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இரவு 7.30 மணிக்கு வாஷிங்டன் டி.சி.யில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9/11 பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாக இருந்த 71 வயதான நபர் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு 25 மில்லியன் டொலர் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் திகதி தான்சானியாவில் உள்ள டார் எஸ் சலாம் மற்றும் கென்யா - நைரோபியில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது குண்டுவீசி தாக்குதல்களில் ஈடுபட்டதற்காக அவர் அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்நிலையில், வார இறுதியில், ஆப்கானிஸ்தானில் குறிப்பிடத்தக்க அல்கொய்தா இலக்குக்கு எதிராக அமெரிக்கா பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை நடத்தியதாக பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
செயல்பாடு வெற்றிகரமாக இருந்ததாகவும், இந்த நடவடிக்கையின் போது பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஜோ பைடன் கோவிட் தொற்று இருப்பதன் காரணமாக வெள்ளை மாளிகையின் நீல அறைக்கு வெளியே பால்கனியில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.