இரவோடு இரவாக நடத்தப்பட்ட தாக்குதல்..! மின் உற்பத்தி மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையை இலக்கு வைத்த ஈரான்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மீண்டும் கடுமையான போர் மூண்டுள்ளது.
கடந்த ஆறு நாட்களாக இருதரப்பும் மாறி மாறி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஈரானில் கட்டுமானப் பணியில் உள்ள அணுமின் நிலையம் ஒன்றின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெஹ்ரான் குற்றம் சாட்டியுள்ளது.
இதற்குப் பதிலடியாக, குவைத்தில் உள்ள மின் உற்பத்தி மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.
வான்வழித் தாக்குதல்
முன்னதாக, ஜோர்டானில் நடத்தப்பட்ட ஈரான் தாக்குதலில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த புதிய தாக்குதல்களுக்கு உத்தரவிட்டார்.

வொஷிங்டனில் இருந்து வெளியாகும் தகவல்களின்படி, அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு ஈரானின் கடலோரக் கண்காணிப்பு மையங்கள், வான் பாதுகாப்பு வசதிகள் மற்றும் ஏவுகணை-ட்ரோன் சேமிப்புக் கிடங்குகளை இலக்காகக் கொண்டு நடத்தியுள்ளது.
ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை அமெரிக்கா தாக்கினால், அதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளின் உள்கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்பதால், அமெரிக்கா தனது இலக்குகளை இராணுவ நிலைகளோடு சுருக்கிக் கொண்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதி
இதற்கிடையே, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

மேலும், ஜோர்தானின் அகாபா நகரிலுள்ள விமான நிலையம் மற்றும் துறைமுகப் பகுதிகளில் "குறிப்பிட்ட மற்றும் நம்பகமான அச்சுறுத்தல்" இருப்பதாகக் கூறி, அமெரிக்கக் குடிமக்கள் அங்குச் செல்ல வேண்டாம் என ஜோர்தானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளைகுடா நாடுகளின் அழுத்தம் மற்றும் தொடர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்த பிராந்தியப் போர் மேலும் தீவிரமடைந்து வருவது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.