மாதம் ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் நஷ்டத்தில் இயங்கும் விமான நிலையம்
மத்தள விமான நிலையம் மாதாந்தம் ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் நஷ்டத்தில் இயங்கி வருவதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மத்தள விமான நிலையத்திற்கு நேற்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
விமான நிலையம் விற்பனை செய்யப்பட மாட்டாது
மத்தள விமான நிலையம் எந்த சந்தர்ப்பத்திலும் விற்பனை செய்யப்பட மாட்டாது.சர்வதேச விமான நிலையமான இந்த விமான நிலையத்தை மறுசீரமைத்து, சிறந்த முதலீட்டாளர் ஒருவருடன் கூட்டு உடன்படிக்கையை மேற்கொண்டு, அரச மற்றும் தனியார் கூட்டு நிறுவனமாக இலாபமடையும் நிலைமைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
விமானங்கள் வாராத விமான நிலையத்தில் 545 ஊழியர்கள்
எந்த விமானங்களும் வராத இந்த விமான நிலையத்தில் 545 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சில ஊழியர்கள் கொழும்பில் இருந்து தினமும் பேருந்துகளில் மத்தள விமான நிலையத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் மூலம் சம்பாதிக்கும் பணத்திலேயே மத்தள விமான நிலையம் நடத்தப்பட்டு வருகிறது.
மத்தள விமான நிலையத்தை நிர்மாணிக்க சீனாவிடம் பெற்றுக்கொண்ட 21 கோடி அமெரிக்க டொலர் கடனுக்கு தவணையை செலுத்த வேண்டும்.
எப்படியான நஷ்டத்தில் இயங்கினாலும் மத்தள விமான நிலையத்தை பராமரித்து வர வேண்டும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.