ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் மொத்த கடன் 31,500 கோடி ரூபா
மக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு பணிகளை இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என துறைமுகங்கள், கப்பல், விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் மொத்த கடன் 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் எனவும் அவர் கூறியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை சுதந்திர ஊழியர்கள் சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊழியர்கள் உடனான சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
சுயமாக ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு இழப்பீட்டுத் தொகை
மறுசீரமைப்படும் போது எந்த ஊழியரையும் பலவந்தமாக பணியில் இருந்து நீக்க இடமளிக்கப்பட மாட்டாது.
அவர்களுக்கு கௌரவமான பொன்னான இழப்பீடு (Golden Shakehand) கிடைக்கும் வகையில் சுயமாக ஒய்வுபெறும் யோசனையை முன்வைக்குமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஸ்ரீலங்கன் சுதந்திர ஊழியர் சங்கம், ஸ்ரீலங்கன் கேட்ரின் சங்கம், ஸ்ரீலங்கன் நிறைவேற்று அதிகாரிகள் சங்கம், தரை கட்டுப்பாட்டு நிர்வாக அதிகாரிகள் சங்கம், விமான தொழிற்நுட்பட அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.