விவசாய அமைச்சரின் கிளிநொச்சி விஜயம்: குற்றம் சுமத்தும் விவசாயிகள்
விவசாய அமைச்சர் கிளிநொச்சி வந்து சென்றமை தமக்கு தெரியாது என இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் அழிவு தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்திருத்தார்.
குறித்த மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
காப்புறுதி தொகை
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், அங்கஜன் இராமநாதன், எஸ். கஜேந்திரன், வடமாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், மாவட்ட பதில் அரசாங்க அதிபர் முரளிதரன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது, கல்வி, காணி, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டது. வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட பயிர் அழிவுக்கான நட்டயீடு வழங்கப்படாமை தொடர்பில் ஆராயப்பட்டது.
விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை என்பதால் நட்டயீடான காப்புறுதி தொகையை வழங்க முடியாது உள்ளதாக விவசாய காப்புறுதி நிறுவன பிரதிநிதி தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த முத்து சிவமோகன் குறிப்பிடுகையில், சுற்று நிருப்பத்தின் அடிப்படையில் பயிர்கள் மூன்றாக பிரிக்கப்படுகிறது.
முதல் மாதம், பூப்பதற்கு முன்பதான காலம், பூத்த பின்னர் அறுவடை செய்யும் வரையான காலமாக மூன்றாக பிரிக்கப்படுகிறது.
வெள்ளம் ஏற்பட்ட காலம் பூத்த பின்னரான காலம் என்பதால் அது மூன்றாவது நிலையில் உள்ளதாக கருதப்பட வேண்டும். இவ்விடயத்தை ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் எழுதியதுடன், அதன் பிரதியை அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் அனுப்பி உள்ளேன்.
பயிரழிவு மதிப்பீடு
இந்த நிலையில், பூப்பதற்கு முன்பதான 2ம் நிலையில் பயிரழிவு மதிப்பீடு செய்யப்பட்டு நட்டயீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டமையால் நாங்கள் அதற்கு உடன்படவில்லை.
அழிவடைந்த காலம் பூத்ததன் பின்னரான மூன்றாவது காலப்பகுதி ஆகும். இவ்விடயம் தொடர்பில் விவசாய அமைச்சர் கிளிநொச்சி வருகை தந்தபோது அவரிடம் கூறவில்லையா என அமைச்சர் அவரிடம் வினவினார்.
தமக்கு அமைச்சர் வந்தது தெரியாது எனவும், அவ்வாறு அறிந்திருந்தால் நிச்சயம் அவரை சந்தித்து இப்பிரச்சினையை முன்வைத்திருப்பேன் எனவும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |