சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள ஒப்பந்தம்: நம்பிக்கை வெளியிட்டுள்ள சாந்தா தேவராஜன்
தொழில்நுட்ப மட்டத்தில் பேச்சு வார்த்தை இடம்பெற்றவுடன் நாட்டிற்கான நிதியை பெற்றுக்கொள்ளலாம் என ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழக பேராசிரியரும், உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணருமான சாந்தா தேவராஜன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த 11 ஆம் திகதி அவர், ப்ளூம்பெர்க் டிவியிடம் அளித்த செவ்வியொன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "நாட்டில் தற்போது தலைமைத்துவ வெற்றிடம் இருந்தாலும் செப்டெம்பர் - அக்டோபர் மாதத்திற்குள் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மீட்பு பொதியை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
நம்பிக்கை
மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரின் தலைமையில் சர்வதேச நாணய நிதியத்துடன் அலுவலர் மட்ட தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும்.
மேலும், பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்ட அடுத்த மூன்று வாரங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் அலுவலர் மட்ட உடன்பாடு எட்டப்படும்.
இலங்கையின் அரசியல் அமைதியின்மை மற்றும் அடுத்த தலைவர் யார் என்பதில் நிச்சயமற்ற நிலை இருந்தாலும், தொழில்நுட்ப மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னர் போலவே தொடரும்.
அலுவலர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டவுடன், செப்டம்பர்-அக்டோபர் மாதத்திற்குள் பிணை எடுப்பு பொதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு அளவிலான ஒப்புதலை, நாடு பெறும்.
அத்துடன் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிலிருந்து இலங்கை இந்த வருடத்தில் 3-4 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும்.
நாடு பொருளாதார நெருக்கடியின் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், குடிமக்கள் மீதான வலியை குறைக்க, இந்த இடைக்கால நிதியுதவி நாட்டிற்கு முக்கியமானதாக இருக்கும்.
எதிர்பார்ப்பு
தற்போதுவரை எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவை பாதுகாக்க நாட்டிற்கு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியுள்ளது.
இது தவிர, சீனா மற்றும் ஜப்பானிடம் இருந்தும் இடைக்கால நிதியுதவியை இலங்கை அரசாங்கம் நாடியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.