நமுனுகுல, பது/ பிங்கராவ தமிழ் வித்தியாலயத்திற்கு கையளிக்கப்பட்ட அகரன் மண்டபம்
அகரன் அறக்கட்டளையினால் நமுனுகுல, பது/ பிங்கராவ தமிழ் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய "அகரன் மண்டபம்" மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது
கடந்த சனிக்கிழமையன்று (04) குறித்த கையளிப்பு வைபவம் இடம்பெற்றுள்ளது.
வித்தியாலய அதிபர் எம். பாரதலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகரன் அறக்கட்டளை ஸ்தாபகர் தலைவர் பி.ஜோதி கலந்துகொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக அறக்கட்டளையின் உப தலைவர் வை.ரஞ்சித், செயலாளர் ரி.முரளிதரன், விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாக முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
இடப்பற்றாக்குறை
மேலும், எல்ல கோட்ட கல்வி காரியாலய ஆசிரிய ஆலோசகர் எஸ்.அமிர்தலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
பண்டாரவளை கல்வி வலயத்துக்குட்பட்ட நமுனுகுல பெருந்தோட்டப் பாடசாலையானது முதலாமாண்டு தொடக்கம் க.பொ.த சாதாரண தரம் வரையான வகுப்புக்களை கொண்டியங்குகின்றது.
சுமார் 400 மாணவர்கள் வரை கல்வி கற்கும் இப்பாடசாலையில் மூன்று வகுப்பறை கட்டிடங்கள் காணப்பட்டபோதும் இடப்பற்றாக்குறை காரணமாக மாணவர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தகர குடிலிலும் பிங்கராவ தோட்ட ஆலய மண்டபத்திலும் கல்வி கற்று வந்தனர்.
பரீட்சை பெறுபேறு
மழை காலங்களில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
இவ்வாறு வளப்பற்றாக்குறைக்கு மத்தியில் இப்பாடசாலையின் பணியாற்றுகின்ற ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையினால் மாணவர்கள் கல்வி மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் சிறப்பான பெறுபேறுகளை பதிவு செய்து வருகின்றனர்.
எனினும் கட்டிடப்பற்றாக்குறை மிகப்பெரிய குறையாக இருந்த நிலையில் மேற்படி அகரன் அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பின் ஊடாக புதிதாக கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |