இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு
கடற்படையின் படகுகளை தாக்கும் அளவுக்கு வலுமிக்க ரோலர் படகுகளை இந்திய மீனவர்கள் பயன்படுத்துகிறார்கள் என வன்னி மாவட்ட நாடாளுமடன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று (29.06.2024) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடற்றொழிலாளர்களின் பிரச்சனை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”தேசிய கட்சிகள், சிவில் அமைப்புக்கள் என பலமான ஒரு அணி இணைந்திருக்கிறார்கள். இது தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பம்.
ஒற்றுமையை வலுப்படுத்தும் செயற்பாட்டை செய்ய வேண்டும். புரிந்துணர்வு விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.
அதன் பின்னரே வேட்பாளர் மற்றும் போட்டியிடும் கட்சி, சின்னம் தொடர்பில் தீர்மானிக்க முடியும் என்பதுடன் கட்சி, சின்னம் முடிவுக்கு வந்த பின்னரே வேட்பாளர் விடயம் எடுக்கப்படும்.
எங்களது கடற்றொழிலாளர்களின் பிரச்சனை ஏராளம். கடற்படையினர் விசை கூடிய பெரிய படகுகளையே பயன்படுத்துவார்கள்.
அவ்வாறான ஒரு நிலையில் ஒரு கடற்படை வீரர் மரணிக்கும் அளவுக்கு கடலில் நடந்திருக்கு என்றால் இந்திய கடற்றொழிலாளர்கள் எவ்வளவு வலுமிக்க ரோலர் படகுகளை பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிகிறது.
அத்துடன், இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை இந்தியாவிற்கு கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இது தொடர்பில் எவ்வாறான ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்பது இன்னும் வெளிப்படையாக வரவில்லை. இதனை நாம் வழங்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |