கொழும்பு துறைமுக மேற்கு முனைய திட்டத்தில் திருப்புமுனை! அமெரிக்க நிதியை நிராகரித்த அதானி
இலங்கையின், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சர்வதேச முனையத்தை (CWIT) தனது சொந்த வளங்களைக் கொண்டு நிர்மாணிப்பதாக, இந்தியாவின் அதானி குழுமத்தின் ஒரு அங்கமான Adani Ports and Special Economic Zone Limited (APSEZ) தெரிவித்துள்ளது .
இதன்படி, அமெரிக்க நிறுவனமான, US International Development Finance Corporation (DFC) இலிருந்து, 553 மில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக்கொள்ள தாம் மேற்கொண்ட தீர்மானத்தை திரும்பப் பெற்றுள்ளதாக, அதானி நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கையில் CWIT திட்டம் சிறப்பாக முன்னேறி வருவதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில், அது செயற்படத் தொடங்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூலதன மேலாண்மை
இதன்படி நிறுவனத்தின் உள் திரட்டல்கள் மற்றும் மூலதன மேலாண்மை திட்டத்தின் மூலம் இந்த திட்டத்திற்கு நிதியளிக்கப்படும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கையில் கொழும்பு துறைமுகத் திட்டம் என்பது இந்தியாவின் அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ லிமிடெட், இலங்கை துறைமுக ஆணையம் (SLPA), மற்றும் John Keells Holdings ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும்.
இது, கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையத்தை (WCT) மேம்படுத்துகிறது. வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள பொருளாதாரங்களுக்கு சேவை செய்வதற்காக முக்கிய கப்பல் வழித்தடங்களில் இலங்கையின் இருப்பிடத்தைப் பயன்படுத்திக் கொள்வதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்னதாக, கொழும்புத் துறைமுகத்தின், மேற்கு சர்வதேச முனையம் (CWIT) எனப்படும் ஆழ்கடல் கொள்கலன் முனையத்தின் அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் செயல்பாட்டிற்கு ஆதரவாக US International Development Finance Corp, கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்க டொலர் 553 மில்லியன் கடனை வழங்க ஒப்புக்கொண்டது.
அதானி நிறுவனம் மோசடி
இந்த திட்டத்திற்கு 700 அமெரிக்க டொலர் மில்லியன் செலவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் International Development Finance Corporation (DFC) இலிருந்து 553 அமெரிக்க டொலர் மில்லியன்களை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், அதானி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக கூறி, அமெரிக்காவில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
எனவே, DFC நிறுவனம், தமது பங்களிப்பை வழங்காது போகலாம் என்ற அடிப்படையிலேயே, அதானி நிறுவனம், தற்போதைய சொந்த நிதி திட்டத்தை அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |