முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி
முள்ளிவாய்க்கால், இலங்கைத்தீவில் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகரத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரு கடற்கரைக் கிராமமாகும்.
ஆனால் இன்று உலகளாவிய அனைத்துத் தமிழ் மக்களாலும் அன்றாடம் உச்சரிக்கப்படுகின்ற ஒரு சொல்லாகவும், உலகளாவிய அரசியல் மனித உரிமை ஆர்வலர்களாலும் பெரிதும் பேசப்படுகின்ற ஓர் இடமாகவும் அமைந்துவிட்டது என கட்டுரையாசிரியர் மயூரன் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இக்கிராமம் கிழக்குப் புறத்தில் இந்துமா கடலையும் , மேற்குப் புறத்தில் ஒடுங்கிய நந்திக்கடல் நீரேரியையும், தெற்கே வட்டுவாகல் ஆற்றுக் கழிமுகத்தையும், வடக்கே வலைஞர் மடக்கிராமத்தையும் எல்லைகளாகக் கொண்ட ஒரு மணற்பாங்கான சமதரைப் பிரதேசமாகும்.
கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கைத்தீவின் வட பகுதியில் சமுத்திர வாணிபக் கலாச்சாரம் பரவியிருந்த காலத்தில் முள்ளிவாய்க்கால் ஒரு படகுத்துறையாக விளங்கியிருக்கிறது.
வரலாற்றுத் தொன்மை மிக்க பல்வேறுபட்ட படகுத்துறைகள் இலங்கையின் வடபகுதியிலேயே அதிகம் காணப்பட்டன. வங்காள விரிகுடாவில் ஏற்படுகின்ற நீரோட்டமும், பருவக் காற்றுக்களும் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து இலங்கையின் வடபாகத்திற்கு பாய்மரக் கப்பல்களை ஓட்டிச் செல்ல இலகுவாய் அமைந்தன.
எனவே தான் இலங்கையின் வட கரையோரங்களின் கடற் கரையோரக் கிராமங்கள் படகுத் துறைகளாக விளங்கின. அந்த வரிசையிற்தான் முள்ளிவாய்க்காலும் படகுத் துறைமுகமாக விளங்கியது. இத்தகைய நீண்ட தொன்மை மிக்க முள்ளிவாய்க்கால் பிரதேசமும் ஐரோப்பியர் இலங்கையை கைப்பற்றிய பின்னரும் தனது முக்கியத்துவத்தை இழக்கவில்லை.
போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்திலும் சரி, ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்திலும் சரி, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் சரி ஒரு முக்கிய ஓடத்துறையாகவே விளங்கியிருக்கிறது. அத்துடன் முள்ளிவாய்க்காலை அண்டிய கடநீரேரிப் பகுதி சிறந்த உப்பு விளைவிக்கப்படும் பகுதியாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தது. முள்ளிவாய்க்கால் கிராமத்தில் பயிரிடப்பட்ட வெற்றிலைக்கு அன்றைய காலத்தில் பெரும் மதிப்பு இருந்தது.
முள்ளிவாய்க்கால் வெற்றிலை என்றால் அதற்கு விலையும், போட்டியும் அதிகம். நந்திக் கடல் கடநீரேரிப் பகுதியில் பிடிக்கப்படும் இறால்கள் அதிக சுவை வாய்ந்தவை என அறியக்கிடக்கிறது.
இதனை Manual of The Vanni District (Nothren Province) 1895 என்ற நூலில் j.p. Lewis என்ற அன்றைய கால ஆங்கிலேய மாவட்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடி கிளர்ச்சியில் ஈடுபட்ட பண்டார வன்னியனை இறுதியாக கண்ட இடமும் இந்த முள்ளிவாய்க்காலே என வரலாறு பதிவுசெய்திருக்கிறது.
அதாவது பண்டாரவன்னியன் 1811 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆங்கிலேயப்படைகளை தாக்கும் திட்டத்திற்கான ஒற்றிதல் நடவடிக்கைக்காக இக்கிராமத்தில் நடமாடினான் என அன்றைய கால முள்ளிவாய்க்கால் பிரதேச அதிகாரியான கதிர்காமநாயக்க முதலியார் இலங்கையில் பிரித்தானிய ஆளுநரான ரேணருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இவரே ஆங்கிலேயருக்கு பண்டார வன்னியனை காட்டிக்கொடுத்தவராவார். மாறாக பண்டார வன்னியன் நாட்டுக் கூத்தில் வரும் காக்கை வன்னியன் என்ற புனைகதைக் கதாபாத்திரம் இந்த கதிர்காம முதலியாரை வைத்தே புனையப்பட்டது. இதன்பின் பண்டார வன்னியனை வன்னியில் எங்கும் யாரும் கண்டதாக பதிவுகள் இல்லை.
எனவே முள்ளிவாய்காலுடன் பண்டாரவன்னியன் மெளனமாகி விட்டார்.
இந்த சரித்திர நிகழ்வின் பின் ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள் கழிந்து தமிழர்களுக்கு தலைமை தாங்கிய இன்னுமொரு தலைமையையும் இறுதியாக காணப்பட்ட இடமாகவும் முள்ளிவாய்க்கால் அமைந்துவிட்டது(மே 2009). எனவே ஈழத்தமிழர் வரலாற்றில் இரண்டு தலைவர்களை இறுதியாகக் கண்ட மண்ணாக இந்த முள்ளிவாய்க்கால் மண்ணே அமைவதனால் இதற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு.
முல்லைத்தீவு இராணுவத் தளம் கைப்பற்றப்பட்ட பின்னர் இப்பிரதேசம் தமிழர் சேனையின் சர்வதேச விநியோகத் தளமாகவும் விளக்கியது. உலக வரலாற்றில் மனிதகுலம் பல்லாயிரம் போர்க் களங்களைக் கண்டிருக்கிறது. ஒவ்வொரு போர் களங்களும் ஒவ்வொரு வகையான செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கிறது. போர் வெறிபிடித்த மொங்கொலியன் செங்கிஸ்கான் மத்திய ஆசிய நாடுகள் மீது மேற்கொண்ட போர் வெறி பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்தது. மதவெறி பிடித்த முடவன் தைமூர் வட இந்தியாவைச் சிதைத்த போது மடிந்த மக்கள் இலட்சத்தைத் தாண்டினர்.
நவீன உலகின் இனவெறியன் நாசிச ஹிட்லர் யூதர்கள் மீது திணித்த போர் பல லட்சம் யூதர்களை சாம்பலாக்கியது. இந்த வரிசையில் ஆர்மேனியா, கொசோவா, அல்பேனியா, பியபஃரா (நைஜீரியா),சூடான், எரித்திரியா, கிழக்குத் தீமோர் என போர் வெறியர்கள் நிகழ்த்திய மனிதப் படுகொலைகள் மானிட வரலாற்றில் என்றும் அழியாச் சுவடுகளை பதித்திருக்கின்றன.
காருணிய வள்ளல் புத்த பகவானின் போதனைகளைக் கையிலேந்தியந்தியவராக மகிந்ததேரர் ஈழம் வந்தார். அவர் வந்தது அறத்தைப்போதிக்க என்கிறார்கள்.
ஆனால் அவர் ""வழிவந்த"" ராஜபக்சக்கள் கொலைத்தொழில் புரிய ஈழமண் புகுந்தனர். இருவரிலும் ஒரு ஒற்றுமை கண்டோம் இருவரது பயணமும் பௌத்தத்தின் பெயரால் நிகழ்ந்தன.
ஈழமண் பல பௌத்த வெறியர்களை கண்டிருக்கிறது. ஆனாலும் எல்லாவற்றிற்கும் மேலாக பௌத்தமத வெறியனாக தன்னை இனங்காட்டி நவீன துட்டகைமுனுக்கள் என்று தம்பெயரையும் பொறித்துக்கொண்டு இருக்கிறார்கள் மனிதகுலத்திற்கு எதிரான இம்மிகப் பெரும் குற்றவாளிகள்.
21ஆம் நூற்றாண்டில் மனித குலத்திற்கெதிரான மிகப் பெரும் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே நிகழ்ந்தது. முள்ளிவாய்க்கால் என்பது ஈழத் தமிழினத்தின் இனப்படுகொலையின் குறியீடு. பாலையும், நெய்தலும் கலந்த அந்த வறண்ட மண்ணில் தமிழர் தேசத்தின் மைந்தர்கள் நிகழ்த்திய தனிச்சமர் தமிழர்களின் விடுதலை தாகத்திற்கு தக்கசான்று.
அந்த மண்ணில் ஊனுமின்றி, உறக்கமுமின்றி தமிழ் மக்கள் பூவும், பிஞ்சும், காயும் கனியுமாக இறுதிவரை போராடினார்கள். தாயின் மடியிலிருந்த குழந்தை குண்டுபட்டு இறந்தது தெரியாமல் இருந்தாள் ஒருதாய்.
மறுபுறத்தே தாயிறந்தது தெரியாத மகவு பாலூட்டியதே தாய் மடியில். குழந்தையின் இரண்டு கைகளும் இழந்ததையிட்டுத் துடித்தாள் ஒரு தாய். கருவுற்ற தாயின் வயிற்றில் குண்டுபட்டு வயிற்றின் படுகாயத்தினூடே சிசு வெளித் தொங்கியதை இவ்வையகம் எங்கும் பாத்ததுண்டா?. உலகில் மானிடம், மனிதநேயம் பேசும் மானிடவாதிகளுக்கும், ஜனநாயகவாதிகளுக்கும் ஈழத்தமிழ் மக்களின் அவலக் குரல் கேட்கவில்லையே!
அன்றைய நாட்களில் உலகத் தலைநகரங்களின் வீதிகளில் புலம்பெயர் தமிழர்கள் இறங்கி நீதி கேட்டு போராடிக்கொண்டிருந்த போதும் முள்ளிவாய்க்காலில் மக்கள் மடிந்து கொண்டுதான் இருந்தார்கள். மக்கள் உணவின்றி பட்டிணியால் மடிந்தார்கள், குண்டுபட்டு மடிந்தார்கள், படுகாயமடைந்து மருத்துவச் சிகிச்சையின்றி மடிந்தார்கள். இரசாயனக் குண்டிற்கு இரையாகி மடிந்தார்கள்.
பாம்புகடி,விஷஜந்துக்களின் கடிகளுக்கு எல்லாம் பலியாகி மாண்டனர், சனநெரிசலில் அகப்பட்ட மடிந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக 2009 மே மாதம் 16, 17ஆம் நாட்களில் நிகழ்ந்த கொடுமை உலகில் எங்கேனும் நடந்ததுண்டா?அந்தக் கொலைகாரக் ஹிட்லர்கூட கொன்றதன் பின்தான் யூதர்களைப் புதைத்தான், எரித்தான். ஆனால் முள்ளிவாய்க்காலில் சிங்களமோ உயிருடனல்லவா ஈழத்தமிழினத்தைப் புதைத்தது.
ஒன்றா இரண்டா சுமாராக 1, 40,000 மேற்பட்ட ஈழத்தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்தது சிங்கள பௌத்த பேரினவாதம். உலக இராணுவ வரலாற்றில் எந்தவொரு இராணுவமும் செய்திராத கீழ்த்தரமான, மிருகத்தனமான ஈனச்செயல்களை அங்கே ஈழத்தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விட்டிருந்தது. அங்கே களத்திலே வீழ்ந்த பெண்களின் துயிலுரிந்த படைவீரர்களையும், பிணத்துடன் புணர்ந்த காமுகப் படைகளையும் முள்ளிவாய்க்கால் மண் கண்டது.
இறந்த பெண்களின் மார்பினை அறுத்த சிங்களப்படையின் கொடுமையை யாரும் அறிந்துண்டா? மனித மொழிகளில் சொல்ல முடியாத இன்னும் எத்தனை எத்தனை கொடுமைகள் உள்ளதோ அத்தனை கொடுமைகளும் அந்த முள்ளிவாக்கால் மண்ணிலே நடந்தேறின.
அத்தனை கொடுமைகைளையும் மனித மொழியில் சொல்லிடவியலாது! முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழ் மக்கள் எழுப்பிய மரண ஓலங்கள் ஆன்ம ஓலங்களாக தமிழ்த் தேசியத்தின் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்களப்படை கொலைவெறியாட்டத்தை நிகழ்த்துவதற்குத் தடையாக தமிழின வீரர்கள் நடத்திய தனிச்சமர் தமிழீழ விடுதலை இலட்சியத்தின் பற்றுதிக்கு தக்க சான்று. நாற்புறதும் பல்லாயிரம் எதிரிகள் சூழ்ந்துகொண்டு சர்வதேச நாடுகளின் ஆயத தொழில்நுட்ப உதவியோடு நிகழ்த்திய கொடும் போரை எதிர்கொண்டு பல்லாயிரம் எதிரிகளை வீழ்த்திய சிலநூறு புலிவீரர்களின் வீரஉடல்கள் அந்தமண்ணிலே வீழ்ந்ததைத்தான் எப்படி மறப்போம். தம் இறுதி மூச்சுவரை தமிழீழ இலட்சியத்திற்காக அவர்கள் சிந்திய குருதிதான் வீண்போகுமா!
தமிழீழம் என்கின்ற தணியாத இலட்சியத்திற்காக எத்தனை கொடிய துன்பங்களையும், சுமக்கத் தயாராகிய வன்னியின் நான்கரை இலட்சம் மக்களின் அவலம் தோய்ந்த முள்ளிவாக்கால் வாழ்வை எப்படித்தான் மறக்க முடியும்?
முள்ளிவாய்க்கால் என்கின்ற போது ஒவ்வொரு ஈழத்தமினது நரம்புகளும் முறுக்கேறும். இதயத் துடிப்பு அதிகரிக்கும், நெஞ்சம் கனக்கும், தமிழீழம் என்ற இலட்சியக் கனவு உயிர் பெற்று அவர்களை வழிநடத்தும்.
இத்தனை தகுதிகளும் அந்த முள்ளிகாய்க்காலுக்கு எப்படி வந்தது?. நஞ்சு மாலைகள் களத்திலே வீழ்ந்ததாம், அஞ்சிடாதார் உடல்கள் அங்கே அழிந்துபோனதாம், குஞ்சு குருமன்களும் குண்டுபட்டுச் சிதைந்து போனதாம்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டு வரலாற்றின் பின் போர்க்.களத்தில் தமிழினம் ஆடிய வெஞ்சமரது. அந்த முள்ளிவாய்க்கால் போர்க்.களத்தின் கொடுமையை அப்பெருந்.துன்பத்தை எப்படிச் சுமப்பது என்ற கேள்வி எழுகிறது. இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே ஒதுங்கிப் பாதுகாப்புத் தேடினர்.
இச்சிறு பிரதேசத்திற்குள் நான்கு இலட்சத்து இருபத்தாறாயிரம் மக்கள் ஒதுங்கியதனால் சிங்களப் பேரினவாதம் இப்பகுதியில் வைத்தே பெரும் கொலை வெறியாட்டத்தை நடத்தியது. இதனை அன்றைய காலத்தில் பார்வையிட்ட பன்னாட்டு தொண்டு நிறுவன அதிகாரி ஒருவர் முள்ளிவாய்க்கால் கடற்கரை யோரத்தை உலகின் மிகநீண்ட கழிப்றை எனக் குறிப்பிட்டார்.
இன்னுமொரு அதிகாரி உலகின் நீண்ட இடுகாடு எனவும் குறிப்பிட்டதிலிருந்து அந்தப் பகுதியில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கோரமான மனிதப் படுகொலையையும், பேரழிவையும்.
தமிழ் மக்கள் எதிர்கொண்ட பேரவலத்தையும் உணர முடிகிறது. ஈற்றில் தமிழ் மக்கள் தம் எதிரியிடம் தாய்க்கு முன் வயதுவந்த மகனும், தந்தைக்கு முன் வயதவந்த மகளும் மேலதிகாரிக்கு முன் சிற்றூழியரும் ஆசிரியருக்கு முன் மாணவியும் ஆசிரியைக்கு முன் மாணவனும் என அனைவரும் எந்த வேறுபாடுமின்றி ஆடைகள் களையப்பட்டு நிர்வாணமாக எதிரிமுன் நிறுத்தப்பட்டனர்.
மானத்திற்காக உயிர்துறந்த மானத் தமிழினம் அன்று முள்ளிவாக்கால் மண்ணில் உயிர்காக்க எதிரியிடம் நிர்வாணமாக சரணடைய நேர்ந்தது. இந்தப் பெரும் வடுவை தமிழினம் உள்ளவரை முள்ளிவாய்க்கால் என்ற நாமத்தை வாயில் உச்சரித்துச் சுமக்கத்தான் போகிறது. 2009 இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒரு இலட்சத்து நாற்பத்து ஆறாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என, 2014 ஜனவரி எட்டாம் திகதி அமெரிக்க இராஜாங்கத்தினைக்கள விசேட போர்க்குற்ற நிபுணர் ஸ்டீஃபன் ராவுக்கு யாழ்ப்பாண ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளும், மன்னார் ஆயர் இராசப்பு யோசப் அடிகளும் ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்தனர் பிரித்தானிய ஊடகமான சனல்- 04 நிறுவனத்தின் தொடர் ஆவணப்படமான "" Killing Field "" முள்ளிவாய்க்கால் மண்ணில் நடந்த படுகொலைகளை ஆவணப்படுத்தியிருந்தது .
அது முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த காட்டுமிராண்டித்தனமான படுகொலையை உலகுக்கு வெளிக்காட்டியிருந்தது. தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் ஈழத் தமிழினத்தை முள்ளிவாய்க்காலில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
எங்கு அந்த மக்கள் நிறுத்தப்பட்டார்களோ அங்கிருந்துதான் அடுத்தகட்ட போராட்டப் பயணத்தை முன்னெடுத்துச் செல்லமுடியும். ஆயுதப் போராட்டம் எதனை அந்த மக்களிடம் இறுதியாகத் தந்திருக்கிறதோ அதனை வைத்துக்கொண்டுதான் அடுத்தகட்ட வரலாற்றுப்பயணத்தை அவர்களால் தொடர முடியும்.
2009 மே 17 முள்ளிவாய்க்கால் மண்ணில் தம்முறவுகளின் பிணக்குவியலின் மீது ஏறிக்கடந்து அந்த மண்ணைவிட்டு வெளியேறிய தமிழீழ மக்கள் ஞானம் பெற்றனர். அந்த மண்ணிலிருந்து ஞானம் பெற்று மீண்டவர்களிலிருந்து அறிஞர்களும், ஞானிகளும், இலக்கிய கர்த்தாக்களும், படைப்பாளிகளும், தீர்க்க தரிசிகளும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வலிகளைச் சுமந்து முளைத்தெழுவர்.
அவர்கள் வரப்போகும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கான ஞானோதயமாய் எதிர்கால மனிதகுல வரலாற்றுக்கான வழிசமைக்கும் பிரமாக்களாக விளங்குவர்.
முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களை இனப்படுகொலை செய்ததன் மூலம் தமிழீழத்தின் இராணுவபலம் உடைக்கப்பட்டு தமிழீழ நிழல் அரசு தற்காலிகமாக வீழ்த்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் தமிழீழ இலட்சியத்தின் முடிவல்ல.
அது தமிழீழத்தின் கருத்தரிப்பு. சிங்களம் முள்ளிவாய்க்காலில் முடிவுரை எழுதியதாக எக்காழமிடலாம் . அது தமிழினத்தின் எழுச்சிக்கான ஒரு புதிய கட்டிடம். A உலக வரலாற்றில் ஒடுக்கப்பட்ட இனம் ஒடுங்கிக் கிடந்த தான வரலாறு எங்குமில்லை.
அப்படியிருக்க ஒடுக்கிய சிங்களம் ஓய்வெடுப்பதா? முள்ளிவாய்காலில் ஒடுங்கிய
தமிழனத்தின் ஆன்ம ஓலம் ஒடுங்கித்தான் கிடக்குமா? உலகத்தமிழினமே விழித்திரு,
வெறித்திரு, தெளிந்திரு, நாளைய போரை அவர்களுக்காக முன்னெடுக்க வேண்டும்
என்பதே வரலாற்றின் கட்டளையாகும்.