மாவீரர் தினத்துக்கு எதிரான பொலிஸாரின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்கின்றாரா ஜனாதிபதி : கடுமையாக சாடும் சாணக்கியன் (Video)
நல்லிணக்கம் பேசும் ஜனாதிபதி நல்லிணக்கத்திற்கு மாறாக இறந்தவர்களை நினைவுகூருவோரை கைதுசெய்யும் பொலிஸாரின் செயற்பாடுகளை அவர் கண்டு மௌனமாக இருப்பாரானால் பொலிஸாரின் செயற்பாடுகளை அவர் ஏற்றுக்கொள்கின்றார் என்றே பார்க்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பு வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகரை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் அண்மையில் தரவை துயிலும் இல்லத்தில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து அவருடன் கலந்துரையாடியுள்ளார்.
மாவீரர் துயிலும் இல்லம் என்ற பதாகை வைக்கப்பட்டதன் காரணமாக மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் உட்பட நான்கு பேரை கைதுசெய்து அவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்கு தொடுத்துள்ளதாகவும் இதன்போது சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம்
மேலும், குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டு இரண்டு தினங்களை கடந்துள்ள நிலையில் இதுவரையில் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமை குறித்தும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளதன்
காரணமாக அவர்களை மூன்று தினங்கள் வைத்து விசாரணைசெய்த பின்னர் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்த முடியும் என பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தமாட்டோம் என்று சர்வதேசத்திற்கு கூறிவிட்டு இங்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸாரின் செயற்பாடுகள்
தொடர்ந்து, இதேபோன்று வவுணதீவு பிரதேசத்தில் பிறந்த நாளுக்கு கேக் வெட்டியவர்களையும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் இந்த நாட்டில் இவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தாது எனவும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று அவர் இது தொடர்பான நடவடிக்கையெடுக்காவிட்டால் அவர் நல்லிணக்கத்திற்கு மாறாக இறந்தவர்களை நினைவுகூருவோரை கைதுசெய்யும் பொலிஸாரின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்கின்றார் என்றே பார்க்கவேண்டும்.
இராணுவத்துடன் இணைந்து கடந்த காலத்தில் தமிழ் மக்களை கொலைசெய்தவர்கள் வெருகல் பகுதியில் சிவப்பு, மஞ்சள் கொடிகளை கட்டி நிகழ்வுகளை செய்யும்போது அவர்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படுவதில்லை.
எதிர்வரும் காலங்களில் ஆலயங்களில் கூட சிவப்பு மஞ்சள் கொடிகளைக்கட்டி நிகழ்வுகளை செய்யும்போது அதுவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றமாக சொல்வார்களா என்பது தெரியாது என சாணக்கியன் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்கள் - குமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |