அலைகரையில் குடியிருக்கும் 380 குடும்பங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி (VIDEO)
வவுனியாவில் குளத்தின் அலைகரைகளில் நீண்டகாலமாக குடியிருக்கும் 380 குடும்பங்களும் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, பண்டாரிக்குளம் குளத்தின் அலைகரைப் பகுதியில் குடியிருக்கும் 32 குடும்பங்களின் அழைப்பையேற்று அங்கு சென்ற மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன், அபிவிருத்திக் குழுத் தலைவரின் இணைப்புச் செயலாளர் கே.டினேஸ் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் ஆகியோர் அம் மக்களின் நிலமை தொடர்பில் கேட்டறிந்தனர்.
இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த பல மக்கள் வவுனியாவில் உள்ள பல குளங்களின் அலைகரைகளில் நிரந்தரமான வீடுகளை அமைத்து 10 - 30 வருடங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.
குறிப்பாக பண்டாரிக்குளம், வைரவபுளியங்குளம், திருநாவற்குளம் என பல பகுதிகளில் மக்கள் இவ்வாறு குடியிருக்கின்றனர். 380 வரையிலான குடும்பங்கள் இவ்வாறு குடியிருப்பதாக தெரியவருகிறது.
இந்நிலையில் பண்டாரிக்குளம் குளத்தின் அலைகரை பகுதியில் குடியிருக்கும் 32 குடும்பங்களுக்கு எதிராக கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 6 குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு நீதமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. ஏனைய வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பை பெற்ற மக்கள் மேன் முறையீடு செய்யவுள்ளதாக என்னிடம் தெரிவித்துள்ளனர். நானும் 32 குடும்பங்களின் நிலமைகளை சென்று பார்வையிட்டேன்.
வவுனியா மாவட்டத்தில் நீண்ட காலமாக நீரேந்து பிரதேசங்களில் வசித்து வரும் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் சம்மந்தப்பட்ட திணைக்களம் மற்றும் எமது கட்சி தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) ஆகியோருடன் பேசி வருகின்றேன்.
நானும், அமைச்சரும் குறித்த விடயத்துடன் தொடர்புடைய அமைச்சுக்களுடனும் பேசி வருகின்றோம்.
இந்நிலையில் நீண்டகாலமாக அதில் குடியிருக்கும் மக்கள் பாதிக்கப்படாத வகையில் எதிர்காலத்தில் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும்.380 குடும்பங்கள் தொடர்பிலும் நான் கவனம் செலுத்தியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.





