தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்க நடவடிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொவிட் தொற்றாளர்கள் பல பிரதேசங்களில் இனங்காணப்பட்டதனை தொடர்ந்து மாவட்டத்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் திருகோணமலை பட்டினமும், சூழலும் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளான முருகாபுரி,ஜின்னாநகர் மற்றும் அபயபுரவின் ஒரு பிரிவு என்பன மறு அறிவித்தல் வரை நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக்கப்பட்டுள்ளதாகத் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளருமான சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்துள்ளார்.
எனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ளவர்கள் குறித்த பிரதேசங்களை விட்டு வெளியேறல் மற்றும் குறித்த பிரதேசங்களுக்கு வெளியார் உள்நுழைதல் என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் அத்தியாவசிய மருத்துவ தேவைகள் மற்றும் அவசர தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்ளும் நோக்கில் உரிய நடைமுறைகள் குறித்து மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான உலர் உணவுகள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டும் வருகிறது.
அத்துடன் தனிமைப்படுத்தல் பிரதேசங்களிலுள்ள குறை வருமானம் கொண்டவர்களுக்கு அரசாங்கத்தின் உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாவட்ட மக்கள் இத்தருணத்தில் சுகாதார நடைமுறைகளை முற்றாகக் கடைப்பிடித்து கொவிட் பரவலை ஒழிக்கப் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனிமைப்படுத்தல் அமுலில் உள்ள பிரதேசங்களில் பொலிசார் , பாதுகாப்புப் படையினர் மற்றும் சுகாதாரத்துறையினரும் மேற்பார்வை நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.