மீன்வள இழப்பைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை
மீன்வள இழப்பைத் தடுக்கவும், உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கவும் இலங்கை அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, இரண்டு ஆண்டுகளில் 250 நிரந்தர நன்னீர் நீர்த்தேக்கங்களில் தடுப்பு வலைகளை நிறுவும் திட்டத்திற்கும் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்களின் இழப்பு
பல்வேறு காரணங்களுக்காக நீர் திறக்கப்படும்போது, ஆண்டுதோறும் ஒரு நன்னீர் நீர்த்தேக்கத்திலிருந்து 20,000 முதல் 40,000 கிலோ வரையிலான மீன்கள் அடித்துச் செல்லப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக இனப்பெருக்க திறன் கொண்ட முதிர்ந்த மீன்களின் இழப்பு, எதிர்கால மீன்வளத்தை கடுமையாகக் குறைத்துள்ளது.
மேலும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு சத்தான உணவை வழங்குவதில் நன்னீர் மீன்வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இலங்கையில் 95 வகையான நன்னீர் மீன்கள் உள்ளன, அவற்றில் 52 இனங்கள் நாட்டிற்கு மட்டுமே சொந்தமானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



