போதைப்பொருளை தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
மேல்மகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை பரவுவதை தடுப்பதற்கு 'முன்னெச்சரிக்கை குழுக்கள்' எனும் குழுக்களை அவசரமாக நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கம்பஹா மாவட்டக் குழுவில் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், வலய அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த முன்னெச்சரிக்கை குழுக்களை நிறுவ நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளார்.
சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தல்

கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் குழுவின் தலைவர் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் விதான மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நேற்று (28.10.2022) கம்பஹா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
பிரசன்ன ரணதுங்க மேல்மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் மேல்மாகாண பாடசாலைகளை மையப்படுத்தி இவ்வாறான குழுவொன்று உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்ததாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சிறுவர்களும் போதைப்பொருள் வர்த்தகர்களின் இலக்காக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், பாடசாலைகளைச் சுற்றி அடிக்கடி சோதனை நடத்தி, சட்டத்தின் கீழ் அவர்களைக் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
வெள்ளத்தில் மூழ்கிய தாழ்நிலங்கள்

அத்துடன் அண்மையில் பெய்த மழையினால் கம்பஹா மாவட்டத்தில் பெருமளவிலான தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், அதனைக் கட்டுப்படுத்துமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கம்பஹா மாவட்ட செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தவுக்கு ஆலோசனை வழங்கினார்.
வெள்ளத்தால் தடைப்படும் கால்வாய்களை சுத்தப்படுத்த குறுகிய கால வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். பல கால்வாய்களை சுத்தப்படுத்துவதற்கான குறுகிய கால வேலைத்திட்டங்களின் கீழ் மாவட்ட செயலாளரிடம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கம்பஹா மாவட்டத்தில் ஜாரு கால்வாய், களுகொட்டுவ கால்வாய், குண்டி கால்வாய், களுகொல ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ள கால்வாய் மற்றும் பல்லேவெல புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கால்வாய்களை சுத்தப்படுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அனைத்து பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் கல்விக் குழுக்களை விரைவில் ஆரம்பிக்குமாறும் அமைச்சர் மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்நிகழ்வில் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த, கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சஹன் பிரதீப் விதான, உபுல் மஹேந்திர ராஜபக்ச, உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.