ஆயுதம் தாங்கிய படையினருக்கு பதில் ஜனாதிபதியாக ரணில் சற்றுமுன் விடுத்துள்ள உத்தரவு
ஆயுதம் தாங்கிய படையினருக்கு இலங்கையின் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
அதன்படி ஊரடங்கு சட்டமும், அவசர காலச் சட்டமும் நடைமுறையிலுள்ள தற்போதைய சந்தர்ப்பத்தில் நிலைமைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமாறு ஆயுதம் தாங்கிய படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டில் அமைதியை பேணுமாறு பொதுமக்களிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய ஜனாதிபதி நியமனம்
இதேவேளை ஜனாதிபதி இன்று பதவி விலகியதும் அடுத்த வாரம் புதிய ஜனாதிபதியை நியமிக்க கட்சித் தலைவர்கள் ஏற்கனவே இணங்கியுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக நாடாளுமன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதில் அதிபராக இது ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பில் மேலும், சர்வகட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தி நாட்டில் அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்காக, பதில் அதிபரான நானும், சபாநாயகரும் தற்போது செயற்பட்டு வருகின்றோம். ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் சில நபர்களும் அதனை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். அதிபர் கோட்டாபய ராஜபக்ச நேற்றிரவு மாலைதீவு புறப்பட்டுச் சென்றார்.
அதனை எனக்கும், சபாநாயகருக்கும் அறிவித்தார். ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்திருந்தார். அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைத்த பிறகு, வாக்களிப்பு மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியும். இன்றைய ஆர்ப்பாட்டக்காரர்கள் பல திட்டங்களை வகுத்திருந்தனர். அவற்றை புலனாய்வு அமைப்புகள் மூலம் தெரிந்து கொண்டோம்.
பிரதமர் அலுவலகம், வான்படை தளபதியின் இல்லம், கடற்படை தளபதி இல்லம், நாடாளுமன்றம் என அனைத்தையும் முற்றுகையிட தயாராகி இருந்தனர். பிரதமர் அலுவலகத்துக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சபாநாயகரின் முடிவினால் தான் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதை நிறுத்த முடிந்தது. இந்த இடங்களை கைப்பற்றி நாட்டின் அதிகாரத்தை பலப்படுத்தி, அவர்கள் விரும்பும் ஒருவரை நியமிக்க முயற்சிக்கின்றனர்.
அரசியலமைப்புச் சட்டம் பயனற்றது என்று சிலர் கூறுகிறார்கள். அரசியல் சாசனத்துக்கு புறம்பாக செயல்பட முயற்சிக்கின்றனர். அதனை அனுமதிக்க முடியாது. அரசியலமைப்பை நாம் பாதுகாக்க வேண்டும். நாட்டின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்கவும் மற்றும் அவசரகால நிலையை நடைமுறைப்படுத்தவும் பாதுகாப்புப் படையினரின் அறிவுறுத்தலின்படி தீர்மானித்துள்ளேன்.
இது உங்கள் குழந்தைகளின், நாட்டு மக்களின் எதிர்காலம். இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும். நாடு காக்கப்பட வேண்டும். இந்த பாசிச அச்சுறுத்தலை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.