ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிக்கு உலக சுகாதார மையம் அங்கீகாரம்
கொரோனா வைரஸூக்கு எதிரான அவசரப் பயன்பாட்டுக்காக ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிக்கு உலக சுகாதார மையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது அந்த தடுப்பூசியை உலக நாடுகளுக்கு இறக்குமதி மற்றும் விநியோகத்தை மேற்கொள்வதற்கு அதிக வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு வருடத்திற்கு முன்னர் கொரோனா பரவல் தோன்றியதில் இருந்து உலக சுகாதார மையத்தினால் முதன் முதலாக பைசர் ஃ பயோ என்டெக் தடுப்பூசிக்கே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் ஜேர்மனும் இணைந்து தயாரிக்கும் இந்த தடுப்பூசியை இங்கிலாந்து கடந்த 8 ஆம் திகதி முதல் தமது நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.
இதனையடுத்து அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இதைப் பயன்படுத்துகின்றன.
முன்னதான ஃபைசர் பயோஎன்டெக் தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் பற்றிய தரவுகளை மறு ஆய்வு செய்ய உலக சுகாதார மையம் தனது சொந்த நிபுணர்களையும் உலகெங்கிலும் உள்ள நிபுணர்களையும் அழைத்து மதிப்பாய்வை மேற்கொண்டது.
இதன்போது இந்த தடுப்பூசி உலக சுகாதார மையம் வகுத்துள்ள பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கான கட்டாய அளவுகோல்களை பூர்த்திசெய்துள்ளதாக நிபுணர்கள் பரிந்துரை செய்தமையை அடுத்தே இந்த தடுப்பூசிக்கான அவசரக்கால அனுமதியை உலக சுகாதார மையம் வழங்கியுள்ளது.