விபத்தில் பலியான முன்னாள் போராளி! வாகனத்தை கைவிட்டு தப்பி ஓடிய நபர்
மாற்றுத்திறனாளியான விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியில் நடந்து சென்ற மாற்றுத்திறனாளியான குறித்த முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளி, மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி, விபத்துக்குள்ளாக்கியதுடன் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கு விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து
இந்த விபத்து சம்பவம், நேற்றிரவு (15) மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் கைவிட்டுச் சென்ற மோட்டர் சைக்கிளை மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை கறுவாக்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய விஜயநாதன் வினோசித் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த நபர் வாழைச்சேனை கிரான் வீதியிலுள்ள ஐஸ் உற்பத்திசாலைக்கு அருகாமையிலுள்ள மதுபானசாலை ஒன்றில் இருந்து சம்பவதினமான நேற்றிரவு 8.30 மணிக்கு வீடு செல்வதற்காக வீதிக்கு நடந்து வந்துள்ளார்.
இதன்போது, வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் வீதியில் வீழந்து சம்பவ இடத்திலே உயிரிழந்ததையடுத்து மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் அதனை அங்கு விட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
மேலதிக தகவல்கள் - பவன்