யாழிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பேருந்து விபத்து! : சாரதி மற்றும் நடத்துனர் கைது (Photos)
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அரச தனியார் பேருந்து வேக கட்டுப்பாட்டினை இழந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளார்கள்.
இவ் விபத்து சம்பவம் நேற்று (21) இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்த கிளிநொச்சியினை சேர்ந்த இளைஞனின் உடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் இன்று (21) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விபத்தின் போது காயமடைந்தவர்கள் சிலர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். விபத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் ஏட்டிக்கு போட்டியாக பேருந்தினை ஓட்டிவந்தமையாலேயே விபத்து நிகழ்ந்துள்ளதாக காயமடைந்த மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
விபத்துக்குள்ளான பேருந்தினை முல்லைத்தீவு பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளார்கள்.
அத்துடன், பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட சாரதி மருத்துவ சிகிச்சைக்கா முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பிலும் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
மேலும் சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்தி
யாழிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த பேருந்து விபத்து! 22 பேர் படுகாயம் (PHOTOS)