காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் இதுவரை சுமார் 110 பேர் மரணம்: மனுவல் உதயச்சந்திரா
காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்காக சுமார் 13 வருடங்களுக்கு மேலாக நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்தாலும் நாங்கள் சிறுபான்மை மக்கள் என்பதால் எவ்வித பதிலும் வழங்காது அரசு கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது என மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத் தலைவி மனுவல் உதையச்சந்திரா தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) காலை மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிடத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிடத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுத்தோம்.
மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் எல்லோரும் கலந்து கொண்டார்கள்.உலக நாடுகளும் அவதானித்துக் கொண்டிருக்கிறது. எமது நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச நாடுகளும் பார்த்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் இன்று வரை மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டே இருக்கின்றது.
ஆனால் எல்லோரும் கண்களை மூடிக் கொண்டு இடம்பெற்று வருகின்ற மனித உரிமை மீறல்களைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் எவ்வித பதிலும் கூறுவதாக இல்லை.
நாங்கள் ஒவ்வொரு வருடமும் சர்வதேச மனித உரிமைகள் தினமாக இருந்தாலும் சரி,சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமாக இருந்தாலும் சரி கடந்த 13 வருடங்களாகப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். நாங்கள் சிறுபான்மை மக்கள் என்பதால் எவ்வித பதிலும் கிடைப்பதில்லை. அரசு கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது. எங்களுக்கு நீதி ஒன்று வேண்டும்.
அதற்காகவே வடக்கு கிழக்கில் 8 மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதிகளில் இறங்கி சுமார் 1800 நாட்களாகப் போராடி வருகின்றனர். இதுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் சுமார் 110 பேர் வரை மரணித்துள்ளனர். ஒவ்வொரு மரணங்களும் இதில் மறைந்து கொண்டே செல்கிறது.இதனால் எங்களின் சாட்சிகளும் மறைக்கப்பட்டுக் கொண்டே போகிறது.
அதனையே அரசாங்கம் எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறது.அதற்குச் சர்வதேச நாடுகளும், ஜெனீவாவும் பக்க பலமாக இலங்கை அரசாங்கத்திற்குத் துணையாக நின்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எங்களுக்குத் தெரிகிறது. கடந்த 5 வருடங்களுக்கு முன் ஒரு கதை வெளியாகியது காணாமல் போனவர்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு முதலைக்குப் போட்டதாகக் கதை வெளிவந்தது. தற்போது ஒரு கதை வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானுக்கு 35 ஆயிரம் கண்கள் தானம் கொடுக்கப்பட்டுள்ளது என்று. ஓ.எம்.பி என்று ஒரு அலுவலகத்தைத் திறந்து உள்ளார்கள். அந்த அலுவலகத்தினால் எவ்வித நன்மையும் இல்லை. சர்வதேசத்தின் கண் துடைப்பிற்காகவே குறித்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
நாங்கள் யாரிடம் சென்று எதை கூறுவது என்று தெரியவில்லை. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக வீதிகளில் இறங்கி கண்ணீர் சிந்தும் தாய்மாரைச் சற்று நிமிர்ந்து பாருங்கள். இறந்தவர்களுக்காக நாங்கள் போராடவில்லை. உயிருடன் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்காகவே நாங்கள் போராடி வருகிறோம். இனி எங்களிடம் தொலைப்பதற்கு எதுவும் இல்லை.
எங்களின் துயரம் உங்களுக்கு ஒரு கதையாகவே தெரிகிறது.சர்வதேசமாக இருந்தாலும் சரி ஜெனிவாவாக இருந்தாலும் சரி ஒரு தடவை எங்கள் பக்கம் நின்று பாருங்கள். அப்போது தான் நாங்கள் படுகின்ற துயரங்கள் உங்களுக்குத் தெரியும்.
அரச பேருந்துகளில் மக்களை ஏற்றி வந்து முகாம் அமைத்து அங்கே இறக்கப்பட்டனர்.அந்த முகாம்களிலிருந்து தெரிவு செய்து இளைஞர்களை ஏற்றி அரச பேருந்திலேயே அழைத்துச் சென்றனர். அந்த இடத்தில் பதிவு ஒன்றை மேற்கொண்ட பின்னரே எமது பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு சென்றிருப்பார்கள்.
அந்த பதிவுகள் எங்கே?என்று அரசாங்கத்திடம் கேளுங்கள்.நாங்கள் கேட்டால் அரசு
கூறுகிறது இல்லை.எனவே சர்வதேசம் கேட்டு எங்களுக்கு நீதியைப் பெற்றுத் தாருங்கள்
என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.