சத்திர சிகிச்சைக்காக சென்ற இலங்கை பௌத்த பிக்கு ஒருவர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி மரணம்
சேருவில் மங்கள ரஜமஹா விகாரதிபதி முங்ஹேனே மெத்தாராம தேரர் இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
62 வயதான மெத்தாராம தேரர், சத்திர சிகிச்சை ஒன்றுக்காக இந்தியாவுக்கு சென்றிருந்தார்.
சேருவில் மங்கள ரஜமஹா விகாரையின் விகாராதிபதியாக இருந்த சேருவில் சரணகீத்தி தேரர் காலமானதை அடுத்து மெத்தாராம தேரர் விகாராதிபதியாக பொறுப்பேற்றார்.
திருகோணமலை சேருவில் பிரதேசத்தை கேந்திரமாக கொண்டு மெத்தாராம தேரர் கிழக்கில் பௌத்த புராதன இடங்களை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சென்றிருந்த மெத்தாராம தேரர், சத்திர சிகிச்சை செய்யப்படும் முன்னர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
நிலவும் பாதுகாப்பற்ற நிலைமையில் தேரரின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட மாட்டாது எனவும் அந்நாட்டிலேயே தகனம் செய்ய வாய்ப்புள்ளதாக சேருவில் மங்கள ரஜமஹா விகாரையின் தகவல்கள் கூறுகின்றன.
