தேர்தல் ஆணைக்குழுவில் பிளவு-சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடும் அரசாங்கம்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணைக்குழுவிற்குள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் பிளவு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற அரசாங்கம் தீர்மானத்துள்ளதாக அரசாங்கத்தின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துவது தொடர்பில் இரண்டு நிலைப்பாடுகள்
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரான சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவுடன் ஒரு அணியும், இதற்கு மாறான நிலைப்பாட்டை கொண்டுள்ள மற்றுமொரு அணியும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக இரண்டு நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளதால், அதனை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு தரப்பு தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதுடன் மற்றைய தரப்பு நிதி இல்லாத காரணத்தினால், தேர்தலை நடத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பது இந்த பிளவுக்கு காரணம் எனக்கூறப்படுகிறது.
நிதி வழங்கப்படும் என நிதியமைச்சு உறுதிமொழியை வழங்கும் வரை தேர்தல் தினத்தை அறிவிக்க வேண்டாம் என ஒரு தரப்பினர் கூறியுள்ளனர்.
தேர்தலை நடத்த 12 பில்லியன் ரூபா தேவை
தேர்தலுக்காக வரவு செலவுத்திட்டத்தில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் 12 பில்லியன் ரூபா தேவைப்படுகிறது. இரண்டு பில்லியன் ரூபா குறைவாக இருப்பதால், தேர்தல் செலவை முற்றாக ஈடு செய்ய முடியாது என கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் தேர்தல் நடத்தப்படும் போது தேவையான நிதியை நிதியமைச்சு வழங்கும் என்ற நம்பிக்கையும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இருப்பதாக அதன் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அதேவேளை தேர்தல் ஆணைக்குழுவின் முழுமையான இணக்கப்பாட்டுடனேயே வேட்புமனுக்கள் கோரப்படும் திகதிகளை அறிவித்ததாக ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மேற்கொள்வார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் வேட்புமனுக்களை பெற்றுக்கொண்ட பின்னர் தேர்தலை ஒத்திவைக்கும் திட்டத்தில் அரசாங்கம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.



