யாழில் இடம்பெற்ற பெண்கள், சிறுவர் விவகாரம் குறித்த முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம்
பெண்கள், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சின் வேலைத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டம், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனனின் தலைமையில் நேற்றைய தினம் (07) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, பெண்கள், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஜே.பி.எஸ்.ஜெயசிங்க, அவர்களால், பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
முக்கிய விடயங்கள்
அத்துடன், அமைச்சினால் வழங்கப்பட்ட உதவி திட்டங்கள் மற்றும் ஏனைய வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் திட்டங்களை முன்னெடுத்து செல்வதில் ஏற்படும் சவால்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும், மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் கோரிக்கைகள் அனுப்பப்படும் பட்சத்தில் சாதகமாக பரிசீலிப்பதாகவும் பணிப்பாளர் நாயகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக (வாழ்வாதார செயற்பாடு) அமைச்சினால் வழங்கப்பட்ட நிதிசாா் முன்னேற்றம் தொடர்பில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் களத்தரிசிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் மாவட்டச் செயலக உதவி மாவட்ட செயலாளர், பெண்கள், சிறுவா் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் உத்தியோகத்தர்கள், மாவட்ட பெண்கள் சிறுவர்கள் பிரிவின் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சிறுவர் தொடர்பான உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.