அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் - ஜனாதிபதி கோட்டாபயவின் நடவடிக்கை
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்குள் கடும் பிளவு ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியினால் கூட்டப்பட்ட விசேட அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலை தொடர்பான கலந்துரையாடலின் போது நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு இடையில் கடுமையான பிளவு ஏற்பட்டிருப்பதனை அவதானிக்க முடிந்துள்ளது.
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட வேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால் அரச வங்கி முறை பாரியளவில் பாதிக்கப்பட்டு வீழ்ச்சியடையக் கூடும் என மத்திய வங்கியின் ஆளுனர் கருதுகின்றார்.
எப்படியிருப்பினும் எரிப்பொருள் விலையை அதிகரித்து, அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் மீண்டும் கொடுப்பனவு வழங்குவதை விட எரிபொருள் விலையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது உரிய முறையிலான செயற்பாடாக இருக்கும் என நிதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் விலையை அதிகரித்து அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் பணத்தை மீண்டும் கொடுப்பனவுகளுக்கு செலுத்த வேண்டுமாயின், அந்த அதிகரிப்பு வீண் செயலாகும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் கருத்து பரிமாற்றங்கள் நீடித்த நிலையில், எரிபொருள் விலை தொடர்பில் தீர்மானம் எடுக்காமல் விசேட அமைச்சரவை கூட்டத்தை நிறைவு செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்ததாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.