வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற மீளாய்வு கலந்துரையாடல்
முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்று (31) நடைபெற்றுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் கடந்த 2024.05.20 அன்று சிறப்பாக இடம்பெற்றது.
போக்குவரத்து இடர்பாடுகள்
அதனையடுத்து, இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஆலய வளாகத்தில் போதிய அளவு குப்பைத் தொட்டிகள் வைத்திருந்தும் குப்பைகள் சிதறி காணப்பட்டதாகவும் விசேடமாக மதுபான போத்தல்கள் பியர் ரின் போன்றவை அதிகம் காணப்பட்டதாகவும் துப்பரவு பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அடுத்த வருடம் மதுப்பாவனையை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிடப்பட்டது.
அதனை விடவும் பேருந்து கட்டண அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து இடர்பாடுகள் குறித்தும், நிரந்தர மலசலகூட வசதிகளில் ஏற்பட்ட பிரச்சனை குறித்தும், வாகனத்தரிப்பிட வசதிகளில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்தும் மருத்துவ வசதிகளில் ஏற்பட்ட பிரச்சனை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஏற்பட்ட பிரச்சனைகள்
அது மட்டுமன்றி சுகாதாரம், நீர் வழங்கல், கழிவகற்றல், அன்னதானம், கடைகள் அமைத்தல், வாடகை, காவடி, பாற்செம்பு போன்ற நேர்த்திகளை செய்யும் அடியவர்களின் வசதி தொடர்பாகவும் பாதுகாப்பு போன்ற விடயங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலாளர் சிவபாலன் குணபாலன், கரைத்துறைபற்று பிரதேச செயலாளர் மணிவண்ணன் உமாமகள், கலாசார உத்தியோகத்தர், வற்றாப்பளை ஆலய நிர்வாகிகள், பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் பொங்கல் உற்சவத்தில் பங்குபற்றிய தனியார் நிறுவனங்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |