தனிமையில் இருந்த வயோதிப பெண் கொலை
கொழும்பு தலங்கம பெலவத்தை பத்தரமுல்லை பிரதேசத்தில் வசித்து வந்த 72 வயதான பெண்மணியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு,பொருட்களை கொள்ளையிட்ட இரண்டு பேர் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேக நபரான நழுவா என்ற நபர் போதைப் பொருள் தொடர்பான குற்றத்திற்காக சிறைக்கு சென்று பிணையில் விடுதலையானவர்.
ஆடை தொழிற்சாலையில் தொழில் புரிந்து வந்த பெண்மணி
கொல்லப்பட்ட பெண்மணி தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளதுடன் சுகவீனமான நிலைமையிலும் தலங்கம பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் தொழில் புரிந்து வந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
போதைப் பொருளுக்கு அடிமையான சந்தேக நபர்கள் இந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை கொள்ளையிட்ட போது, உறங்கிக்கொண்டிருந்த பெண் விழித்து எழுந்துள்ளார்.
இதனால், அச்சமடைந்த சந்தேக நபர்கள் வயோதிப பெண்ணை துணி ஒன்றை பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 31 மற்றும் 38 வயதானவர்கள் எனவும் அவர்கள் தலங்கம தெற்கு மற்றும் முல்லேரியா பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர், வயோதிப பெண்ணின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட எரிவாயு கொள்கலன்,கைக்கடிகாரம்,மின் பந்தங்கள்,அயன் பெட்டி மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டி என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தனர்.சம்பவம் குறித்து தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.