இலங்கையில் இருக்கும் சொந்த தாயை சந்திக்க துடிக்கும் லண்டன் பெண்
இலங்கையில் பிறந்து மூன்று மாதங்களில் பிரித்தானிய தம்பதிக்கு தத்துக்கொடுக்கப்பட்ட நிலையில், நீண்ட பல ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் தமது சொந்த தாயாரை சந்தித்துள்ளார் லண்டன் பெண்.
லண்டனைச் சேர்ந்த யாசிகா பெர்னாண்டோ என்பவரே தமது சொந்த தாயாரை நீண்ட போராட்டத்திற்கு பின்னர் சந்தித்துள்ளார். ஆனால், தாம் இன்னமும் உயிருடன் இருப்பதை, தமது எஞ்சிய உறவினர்களிடம் இருந்து தமது சொந்த தாயார் ஏன் இன்னமும் ரகசியம் காத்தார் என்ற தகவலையும் யாசிகா தெரிந்து கொண்டுள்ளார்.
தமது 18 வயதில் தான் யாசிகா பெர்னாண்டோ தாம் தத்துக்கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்து கொண்டுள்ளார். கொழும்பில் உள்ள கன்னியர்கள் மடத்தில் இருந்தே டொனால்டு மற்றும் யசந்தா தம்பதி யாசிகாவை தத்தெடுத்துள்ளனர்.
1980களில் இவர்கள் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். டொனால்டு - யசந்தா தம்பதியிடம் மிக நெருக்கமாக இருந்தாலும், யாசிகாவுக்கு பிள்ளைகள் பிறந்த நிலையில், தமது சொந்த தாயாருடன் இணைய வேண்டும் என்ற ஏக்கம் அவருக்கு அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, தனியார் அமைப்பு ஒன்றின் உதவியுடன் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யாசிகா தாம் பிறந்த கிராமத்திற்கு சென்றுள்ளார். ஆனால் தமது சொந்த தாயாரை கண்டுபிடிக்க முடியாமல் போகவே அவர் பிரித்தானியா திரும்பியுள்ளார்.
இதனிடையே, குறித்த தனியார் அமைப்பானது அடுத்த 5 நாட்களில் யாசிகாவின் குடும்பத்தினரை அடையாளம் கண்டுள்ளது. இருப்பினும் கொரோனா பரவல் காரணமாக குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் போயுள்ளது. இந்த நிலையிலேயே யாசிகா தமது நிலை குறித்து மனம் திறந்துள்ளார்.
தமது தாயாருக்கு 31 வயதிருக்கும் போது தாம் பிறந்ததாகவும், அவருக்கு என்ன ஆனது? ஏன் தம்மை கைவிட்டார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என விரும்பியதாகவும் யாசிகா குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, காணொளி வாயிலாக யாசிகாவை சந்திக்க அவரது தாயார் ஒப்புக்கொள்ள, அந்த சந்திப்பும் நடந்தது.
ஆனால் அதன் பின்னரும் ஓராண்டு காலம் நேரிடையாக சந்திக்க முடியாமல் போனது என்கிறார் யாசிகா.
இந்த நிலையில், யாசிகாவின் சொந்த தாயாருக்கு ஒரு மகன் இருப்பதாகவும், ஒரு சகோதரியை தாயார் தத்துக்கொடுத்த விடயம் அவருக்கு தெரியாது எனவும், ஒரு ரகசியமாகவே தமது தாயார் இந்த விவகாரத்தை பாதுகாத்து வந்தார் எனவும் யாசிகா தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய சூழல் அனைத்தும் சாதகமாக அமைந்தால் இலங்கைக்கு செல்ல இருப்பதாகவும், தமது தாயாரை சந்திக்க வேண்டும் எனவும், தமது பிள்ளைகளை அவருக்கு அறிமுகம் செய்ய வேண்டும் எனவும் சாசிகா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.