மத்திய கிழக்கு மீதான மேற்குலகின் சீரழிப்பு யுத்தத்திலிருந்து தமிழ் தலைவர்கள் கற்கவேண்டிய பாடம்
மத்திய கிழக்குக்கும், ஐரோப்பியர்களுக்கும் இடையிலான யுத்தம் என்பது 2500 ஆண்டுகள் பழமையான பகைமையை கொண்டது.
இது பாரசீகத்தின் சக்கரவர்த்தி டாரியஸும் (Darius) அவருக்கு பின் வந்த ஷேர்சீஸும் (Xerxes) கிரேக்கத்தின் மீது மேற்கொண்ட பெரும் படையெடுப்புடன் ஆரம்பமானது.
மேற்காசியர்களின் ஐரோப்பா மீதான படையெடுப்பு அல்லது யுத்தம் வரலாற்று ரீதியாக எப்போதும் ஐரோப்பியர்களுக்கே நலனை விளைவித்துள்ளது.
அல்லது அதனை தமக்கு சாதகமாக மாற்றி அமைத்திருக்கிறார்கள். மேற்குலத்தவர்கள் தமது நலனை தொடர்ந்து அடையவே மத்திய கிழக்கின் மீது சீரழிப்பு யுத்தத்தை(Destabilization warfare ) காலத்துக்கு காலம் நடத்துகின்றனர்.
"ஆய்வு என்பது காலத்தை முந்தும் செயலும் அது காலத்தை உந்தும் செயலுமாகும்" மத்திய கிழக்கில் நடக்கின்ற சம்பவங்களின் தொடர்ச்சியை நுண்மா நுழைப்புலத்தோடு உட்பொருளைக் காணவும், தத்துவ விசாரணை செய்யவும் வேண்டும்.
ஈரானிய தேசியவாதம்
இஸ்லாமிய நிலப்பரப்பில் நிகழ்கின்ற செயல்கள் தரவல்ல விளைவுகளை அடையாளம் காண தத்துவமும் நடைமுறையும் இணைத்த ஆய்வுக்குச் செல்ல வேண்டும்.
ஈரானின் ஜனாதிபதியின் மரணம் என்பது வரலாற்று பின்னணிக்கூடாக இன்றைய உலக ஒழுங்கின் போக்கின் செல்நெறியில் இருந்தே பார்ப்பது அவசியமானது.
மேலெழுந்த வாரியாக சதிக்கோட்பாட்டு (Conspiracy theory) விளக்கத்தை மாத்திரம் கொடுப்பதனால் முழுமை அடையாது.
அதிலிருந்து மேலும் விரிவான ஒரு பரந்த பார்வைக்கூடாக இதனை சீரழிப்பு யுத்தம்முறை (Destabilization warfare) என்று வரையறுப்பதுதான் பொருத்தமானது.
இன்றைய உலகம் முற்றிலும் பொருளியல் நலன் சார்ந்தது. அவரவர் பொருளியல் நலனை அடைவதற்காகவே கூட்டுக்களும், உறவுகளும் நிகழ்கின்றன.
யுத்தங்கள் கொள்ளையிட்டு பொருளை ஈட்டுவதற்கானது. கொள்ளை - வர்த்தகம் - யுத்தம் இவை ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை.
வர்த்தகத்துக்கு தடை ஏற்படுகின்ற போது யுத்தங்கள் தவிர்க்க முடியாதவை. அந்த யுத்தங்கள் நேரடி யுத்தமாகவோ, மறைமுக யுத்தமாகவோ, பதிலாள் யுத்தமாகவோ, அல்லது சீரழிப்பு யுத்தமாகவோ அமையலாம்.
மனிதகுல வரலாற்றில் மத்திய கிழக்கு என்பது நாகரீகத்தை உலகுக்கு கடத்திய ஒரு நிலம். அந்த நிலப் பகுதியின் நாகரீகம் தனித்துவமானது.
அந்த நிலப்பகுதி உலகளாவிய ஆளுகையின் மையப் பகுதியாகவும் காணப்படுகிறது. மத்திய கிழக்கின் ஆளுகை யாருடைய கையில் இருக்கிறதோ அவர்களினால் தான் உலகினை ஒழுங்குபடுத்த முடியும்.
அதற்குச் சவாலாக இந்தப் பிராந்தியத்தின் மக்களின் மதக் கோட்பாடும் நில அமைவிடமும் அமைந்திருக்கிறது. எனவே இந்த நிலப்பரப்பை ஒருங்கிணைந்த முகாமைத்துவத்தின் கீழ் அதாவது ஒரு கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும்.
அதற்கான அனைத்து மூலோபாயங்களையும் மேற்குலகம் தொடர்ந்து வகுத்து வந்துள்ளது. அந்த மூலோபாயத்துக்கு தடைகள் வருகின்ற போது இந்த பிராந்தியத்தில் யுத்தங்களும், படுகொலைகளும் நிகழும்.
அதனை நோக்கித்தான் இந்த உலக ஒழுங்கு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இது வரலாற்றுப் போக்கில் தவிர்க்க முடியாதது.
உலகளாவிய வரலாற்றில் தனி நபர்களுக்கு என்றொரு எல்லைக்குட்பட்ட பாத்திரமும் உண்டு அத்தகையதொரு பாத்திரம் இருந்திருக்கிறது என்பதற்காக எந்த ஒரு சூராதி சூரனாலும் தனித்து நின்று எதனையும் சாதித்ததாக சொல்லிவிட முடியாது.
மக்கள் திரட்சியைக் கொண்டுதான் எதனையும் தலைவர்களினால் சாதித்திட முடியும். பாரசீக நிலப்பரப்பின் நீண்ட வரலாற்றுப் போக்கில் இஸ்லாத்தின் பெயரால் திறள் திறளகத் திரண்ட மனித ஆற்றல் ஈரானிய புரட்சியை தோற்றுவித்தது.
புரட்சியின் பின்னர் உருத்திரண்ட ஈரானிய தேசியவாதம் திரட்சி பெற்றுள்ளது. அது முற்றிலும் மேற்குலக எதிர்ப்புவாத கருத்து மண்டலத்தினால் கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் ஈரானிய வரலாற்றில் மேற்கு மேற்குலக எதிர்ப்புவாத கருத்து மண்டல உருவாக்கத்தில் ஈரானிய தலைவர்களுக்கு என்றொரு எல்லைக்குட்பட்ட வகிபாகமும் பங்கும் உண்டு.
அந்த அடிப்படையில் ஈரானிய முன்னணித் தலைவர்களும் அவர்களுக்கான வரலாற்று வாய்ப்புகளும் ஒன்றிணைகின்ற போது அந்தத் தலைவர்களுக்கு ஒரு துலக்கமான பூகோள வரலாற்று பாத்திரம் கிடைத்துவிடுகிறது.
சீரழிப்பு யுத்த மூலோபாயம்
ஈரானிய அரசு இஸ்லாமிய மதகுருக்களான அயத்துல்லாக்களினால் வழிநடத்தப்படுகிறது. இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கு உட்பட்டு மேற்குலக எதிர்ப்புவாத கருத்து மண்டலத்தை வரித்துக் கொண்ட எட்டரை கோடி ஷியா முஸ்லிம்கள் ஈரானில் வாழ்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக மத்திய கிழக்கு என்று எடுத்துக் கொண்டால் 24 அரபு நாடுகளும் ஒரு பாரசீக நடுமாக மொத்தம் 25 இஸ்லாமிய நாடுகளில் 53 கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.
இந்த மத்திய கிழக்கு பிராந்தியம்தான் உலகிற்கான சக்தி வளங்களை வழங்குகின்ற பிரதேசமாகவும் உள்ளது. அத்தோடு கிழக்கு-மேற்கு கடல் வர்த்தக பாதையின் முக்கிய பகுதியாகவும் இந்தப் பகுதி உள்ளது.
எனவே, இந்து சமத்திரத்துடன் வர்த்தக பாதையை கட்டுப்படுத்தக்கூடிய நிலையில் ஈரான் உள்ளது. இன்றைய உலக ஒழுங்கில் ஈரானுக்கு முக்கிய பாத்திரமும், பங்கும் உண்டு.
இதனால், ஈரானுடன் மேற்குலகத்தவர் ஒருபோதும் ஒரு நேரடி யுத்தத்துக்கு செல்ல மாட்டார்கள். அவ்வாறே ஈரானும் மேற்குலகத்தவருடனும் அல்லது மேற்குலகத்தவர்களின் முகமாக அராபிய நிலத்தில் அமைந்திருக்கின்ற இஸ்ரேலியர்களுடனும் ஒரு நேரடி யுத்தத்துக்கு செல்ல மாட்டார்கள்.
ஆகவே, இரண்டு தரப்பினரும் தங்கள் பக்க பலத்தை நிரூபிப்பதற்கு அவ்வப்போது பதிலாள் யுத்தங்களை நடத்துவார்கள். மேற்குலகத்தைப் பொறுத்தளவில் மேற்காசியாவை கட்டுப்படுத்தி உலக ஒழுங்கை நெறிப்படுத்துவதற்கு அராபிய நிலத்தில் செருகப்பட்ட ஒரு ஆப்பாகவே இஸ்ரேல் உருவாக்கப்பட்டது.
எனவே, இன்றைய உலக ஒழுங்கை தொடர்ந்து பேணுவதற்கு அரேபிய நிலத்தில் இஸ்ரேல் பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும்.
அதுவே மேற்குலகத்தினுடைய பாதுகாப்பு நலனாகவும் வர்த்தக நலனாகவும் அமையும். இஸ்ரேலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எத்தகைய சக்திகள் மத்திய கிழக்கில் தோன்றினாலும் அந்த சக்திகளை அழித்து ஒழிப்பதில் மேற்குலகம் மிகக் கவனமாகவே செயல்படும்.
அந்த அடிப்படையில்தான் ஒசாமா பின்லேடன், சதாம் ஹுசைன், கடாபி, காசிம் சுலைமானி பற்றிஷேட் என பட்டியல் நீண்டு தற்போது இப்ராஹிம் ரைசி என வந்து நிற்கிறது.
இந்தப் பட்டியல் இனியும் தொடரும். இவ்வாறு ஆளுமை வாய்ந்த தலைவர்கள், விஞ்ஞானிகள், இராணுவத் தளபதிகள், அறிவியலாளர்களை குறிவைத்து கொல்லுவதன் மூலமும் அந்த நாடுகளின் வளர்ச்சியை தடுப்பதும், சீர்குலைப்பதும், ஸ்தம்பிதம் அடையச் செய்வதும்தான் மேற்குலகத்தவர் தொடுத்திருக்கும் சீரழிப்பு யுத்தம் எனலாம்.
வரலாற்று ரீதியாக பாரசீகர்கள் மேற்குலகத்துடன் தொடர்ந்து மோதிக் கொண்டிருக்கின்றனர். இந்த மோதலின் தொடர்ச்சிதான் இப்போது காசாவிலும் செங்கடலிலும் அரங்கேறியது.
இந்த மோதலுக்கு காரண கர்த்தாவாக பின்னணியில் இருந்து செயற்பட்டவர் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி என மேற்குலகத்தவர்களாலும், இஸ்ரேலினாலும் இனங்காணப்படிருந்தார்.
அந்த அடிப்படையில் இவர் உயர்ந்தபட்ச இலக்காக இஸ்ரேல் உள்ளிட்ட மேற்குலகத்தவர்களால் குறி வைக்கப்பட்டிருந்தார்.
அஜர்பைஜானில் அரஸ் நதியின் குறுக்கே இரண்டு நாடுகளும் சேர்ந்து திட்டமிட்டுக் கட்டிய மூன்றாவது அணையின் திறப்பு விழா நிகழ்வுக்காக 19/05/2024 அன்று இப்ராஹிம் ரைசி சென்று மீண்டும் திரும்பியுள்ளார். அஜர்பைஜான் - ஈரான் எல்லைப் பகுதி, காடுகளும் மலைகளும் நிரம்பிய பகுதி.
அந்தப் பகுதியில் பயங்கரப் பனிமூட்டம் நிலவிய சூழலில் வர்செகான் நகருக்கு அருகே அவர் பயணம் சென்ற ஹெலிகாப்டர் தரையில் மோதியிருக்கிறது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமிரப்துல்லாஹியன் உட்பட மேலும் பலர் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர். ஈரான் ஜனாதிபதி விபத்தில் மரணம் ஆனாரா? அல்லது திட்டமிட்டு கொல்லப்பட்டாரா? என்பது பற்றி அறிவார்ந்து ஆராயப்பட வேண்டும்.
ஈரானிய ஜனாதிபதி திட்டமிட்டு கொல்லப்பட்டார் என்பதுதான் மிகச் சரியானது. விபத்து நடந்ததாக சொல்லப்படும் பிரதேசமும் ஏற்பட்ட சேதங்களையும் கவனிக்கின்ற போது அது முற்றிலும் தொழில்நுட்பம் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட படுகொலை என்றுதான் கருத வேண்டும்.
ஆனாலும் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலோ அமெரிக்காவோ ஒருபோதும் உரிமை கோராது. அதே நேரத்தில் ஈரானும் இந்த நாடுகளின் தாக்குதல்தான் என கூறமாட்டாது.
அவ்வாறு இஸ்ரேலியார்கள் தாக்கினார்கள் என்றால் ஈரான் நேரடி ஒரு யுத்தத்துக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அத்தகைய ஒரு நிர்பந்தத்தை தவிர்ப்பதற்கு அவர்கள் நேரடியாக இஸ்ரேலை குற்றம் சுமத்த மாட்டார்கள்.
இது ஈரானைப் பொறுத்தளவில் ஒரு தர்மசங்கடமான நிலையே. உண்மை தெரிந்தும் வெளியே சொல்ல முடியாமல் அதற்கு எதிர் வினையாற்ற முடியாமல் தவிக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
மேற்குலகத்தவரை பொறுத்த அளவில் ஈரானுடைய வளர்ச்சியை தொடர்ந்து கட்டுப்படுத்துவது அவர்களுடைய யுத்த மூலோபாயமாக அமைந்திருக்கிறது.
அதற்காக அவர்கள் ஈரானின் மீது சீரழிப்பு யுத்த மூலோபாயத்தை (Destabilization warfare) பயன்படுத்துகின்றனர்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து செங்கடலிலும் அரேபியர்கள் மேற்குலகத்துக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதலும் ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து இதோ ஈரானுக்கும் இஸ்ரேலுக்குமான நேரடி யுத்தம் ஒன்று நிகழப் போகின்றது என பல்வேறுபட்ட செய்திகள் வெளிவந்தன.
ஈழத் தமிழர்களின் பிரச்சினை
ஆனால், உண்மையில் இஸ்ரேலோ அமெரிக்காவோ ஈரானுடன் ஒரு நேரடி யுத்தத்திற்கு தயார் இல்லை. நேரடி யுத்தத்தினால் வரக்கூடிய அழிவும் அதன் பின்னரான பெறுபேறும் மூன்று தரப்பினருக்கும் நன்கு தெரியும். இஸ்ரேலினால் இஸ்லாமியர்களுக்கு கணிசமான அழிவை ஏற்படுத்த முடியும்.
ஆனாலும் அதனால் இலாபத்தைவிட இஸ்லாமியர்களை ஸ்தம்பிக்க வைப்பதன் மூலம் பெறுகின்ற இலாபம் பெரிதாக அமையும் என்ற அடிப்படையிலேயே அவர்கள் ஒரு சீரழிப்பு யுத்தம் ஒன்று தொடர்ந்து நடத்துவர். ஈராக் அணுவாராய்ச்சி துறையில் முன்னேறி அணு ஆயுதத்தை தயாரிக்கும் நிலையை எட்டியபோது 1981இல் ஈராக்கின் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கி அழித்துவிட்டது.
அதன் பின்னர் ஈராக்கால் எழுந்து வருவதற்கு பல பத்தாண்டுகள் தேவைப்பட்டது. அது மாத்திரமல்ல ஈராக்கிய அணு விஞ்ஞானிகள், அணுவாராய்ச்சி கற்கை நெறிகளில் சிறப்பாக கற்றவர்கள் ஆகியோர் ஐரோப்பிய நாடுகளில் வைத்து இரகசியமாக படுகொலை செய்யப்பட்டார்கள்.
அப்படியே ஈரான் விடயத்திலும் சீரழிப்பு யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஈரானிய அனுவாராய்ச்சியின் தந்தை என வர்ணிக்கப்படும் மோசான் பற்றிஷேட் (Mohsen Fakhrizadeh) 2020 நவம்பர் 27இல் ஈரானில் வைத்து ரோபோக்களின் துணையுடன் சாட்டிலைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொல்லப்பட்டார்.
அதனால் ஈரானின் அனுவாராய்ச்சி மேலும் பல பத்தாண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட்டுவிட்டது. இவ்வாறுதான் ஈரானின் இராணுவ வளர்ச்சியும் அதன் பலமும் அதிகரித்துச் செல்கின்றபோது தமக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை உணர்ந்து ஈரானின் ராணுவ முனைப்பு தளபதியாகிய காசிம் சுலைமானி மீது 03-01-2020 அன்று ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க இராணுவப் படை ட்ரோன்களின் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதில் ஈரானிய இராணுவத் தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஈராக்கின் ஹஷித் அல்-ஷாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு அஹ்தி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு முனைப்பான பல இராணுவத் தளபதிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் ரொக்கட் தாக்குதல்கள் மூலம் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த வரிசையில் அரசியல் ரீதியாக ஈரானில் பலம் வாய்ந்தவரான ஈரானிய ஜனாதிபதி தற்போது கொல்லப்பட்டுள்ளார்.
இந்த கொலைகள் மூன்றிலும் ஒரு தெளிவான ஒழுங்கு இருப்பதை காணமுடியும். காசிம் சுலைமானி வாகனத் தொடரணியாக சென்றபோது அவர் சென்ற வாகனம் மாத்திரமே குறிவைத்து தாக்கப்பட்டது.
அதேபோல ஈரானிய அணு விஞ்ஞானி பற்றிஷாட் வாகனத் தொடரணியில் சென்ற போது அவருடைய கார் மாத்திரமே குறி வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவ்வாறே தற்போது ஈரானிய ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிகொப்டர் அணியில் அவர் பயணித்த ஹெலிகொப்டர் மாத்திரமே இயந்திரக் கோளாறு காரணமாக தரையில் மோதி மரணம் சம்பவித்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால், இது ஒரு திட்டமிட்ட தொழில்நுட்ப ரீதியான தாக்குதல் என்றே கொள்ளப்பட வேண்டும். அமெரிக்காவோ, இஸ்ரேலோ தம்வசம் வைத்திருக்கின்ற அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்கள் பற்றி யாருக்கும் தெரிவதில்லை.
யுத்தம் ஒன்றில் பயன்படுத்தப்பட்டால் மாத்திரமே வெளி உலகத்திற்கு தெரியவரும். மாறாக அந்த ஆயுதங்கள் குறித்த ஒரு இலக்கிற்கு மாத்திரம் பயன்படுத்தப்பட்டால் அந்த ஆயுதம் பற்றி முழுமையான விவரத்தை கண்டறிவது இலகுவான காரியம் அல்ல.
ஏனையவர்களிடம் இருக்கின்ற தொழில்நுட்பங்களின் மாதிரிகளுடன் ஒப்பிட்டு ஊகங்களை மாத்திரமே தெரிவிக்க முடியும். இங்கே ஈரானிய ஜனாதிபதியுடைய ஹெலிகொப்டர் மீது லேசர் தாக்குதலோ அல்லது லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹெலிகாப்டரின் இயந்திர இயக்கத்தில் சமநிலையை கட்டுப்படுத்தியதாகவோ இருக்கலாம்.
மனித வளத்தை நேரடியாக பயன்படுத்தாது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீரழிப்பு அழித்தொளிப்பு யுத்தம் ஒன்றை நடத்த முடிகிறது.
இலத்திரனியல் ஊடாகவோ, தகவல் தொழில்நுட்பத்துக்கு ஊடாகவோ, தகவல்களைத் திருடுவது, அழிப்பது, தவறான தரவுகளை பதிப்பிப்பது, திசை திருப்புவது, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அழிப்பது, முக்கிய தலைவர்களைக் கொல்லுவது, அல்லது அவர்களை களத்தில் இருந்து அகற்றுவது என்பவற்றினை தமது வளர்ச்சியடைந்த தொழில்நுட்பத்தின் ஊடாக இஸ்லாமிய உலகத்தை மேற்குலகம் கட்டுப்படுத்துகிறது.
இத்தகைய தொழில்நுட்ப தாக்குதல்களுக்கு இஸ்லாமிய உலகத்தினால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதும் உண்மையே. எது எப்படி இருப்பினும் ஈரானிய ஜனாதிபதி கொல்லப்பட்டிருக்கிறார்.
மத்திய கிழக்கில் உருவெடுத்து இருந்த கடும்போக்காளரான பெரும் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். ஈரானின் அடுத்த கட்ட இராஜதந்திர நகர்வுகளும் அரசியல் நகர்வுகளும் இதனால் ஒருபடி பின்னோக்கிச் செல்லும்.
இந்த அடிப்படையில் பார்த்தால் இஸ்லாமிய உலகம் ஒரு கட்டத்திற்கு வளரும்வரை காத்திருந்து அதை கத்தரிக்கின்ற, சிதைக்கின்ற ஒரு மூலோபாயத்தையே மேற்குலகம் கொண்டிருக்கிறது.
இந்த மூலோபாயத்தை பயன்படுத்துவதன் மூலம் குறைந்த செலவில் பெரும் பயனை பெற்றுக் கொள்வதோடு தொடர்ந்து இஸ்லாமிய உலகினை ஒரு கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்து வைத்திருக்க முடியும்.
வளர்ச்சிக்கு அமைதியும் சமாதானமும் தேவை. அந்த அடிப்படையில் இஸ்லாமிய உலகத்தின் அறிவியல் அரசியல் வளர்ச்சிக்கும் அமைதியும் சமாதானமும் தேவை. ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டில் மத்திய கிழக்கில் 10 வருடங்களுக்கு மேல் ஒரு அமைதி நிலவியதாக இல்லை.
எங்கோ ஒரு மூலையில் யுத்தம் தொடர்ந்து நடைபெற்று இருக்கிறது என்ற அடிப்படையில் இஸ்லாமிய உலகை அமைதியாக இருக்க விடுவது என்பது மேற்குலகத்திற்கு ஆபத்தானது என்ற அடிப்படையிலேயே மத்திய கிழக்கில் யுத்தங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.
இங்கே யுத்தங்கள் தோன்றுவதற்கு மத்திய கிழக்கின் தத்துவவியல் அரேபியர்களுக்கோ இஸ்ரேலியர்களுக்கோ வாய்ப்புக்களை வழங்கத் தூண்டுகின்றது.
அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி இஸ்ரேலியர்கள் அரபுலகத்தின் மீது அவ்வப்போது அழித்தொழிப்பு யுத்தத்தையோ, சீரழிப்பு யுத்தத்தையோ நிகழ்த்த முடிகிறது.
மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தின் வருமானத்தின் பெரும்பகுதி இவ்வாறு யுத்தங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது. யுத்தத்திற்கு பின்னான பேரழிவிலிருந்து மீள் கட்டுமானம் செய்வதற்கும் பெரும் நிதி தேவைப்படுகின்றது.
அந்த பேரழிவிலிருந்து மீள்வதற்கான மீள்கட்டுமானங்களை கட்டுவதற்கான ஒப்பந்த நிறுவனங்களும் மேற்குலகத்தினுடையதாகவே இருப்பதனையும் அவதானிக்க வேண்டும்.
மொத்தத்தில் அரேபிய நிலத்தில் நடக்கின்ற யுத்தங்களினாலும் மீள் கட்டுமானத்தினாலும் பெரும் நலன் அடைபவர்களாக மேற்குலகத்தவர் இருக்கின்றார்கள் என்ற பச்சை உண்மையை இந்த உலகம் காணத் தவறுகின்றது.
ஒரு நாட்டை வெற்றி கொள்வது அல்லது ஒரு மக்கள் கூட்டத்தை வெற்றி கொள்வது நேரடி யுத்தத்தினால் மட்டுமல்ல சீரழிப்பு யுத்தத்தினாலும் வெற்றி கொள்ள முடியும்.
வெறுமனே தலைவர்கள், விஞ்ஞானிகள், இராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டார்கள் என மேலெழுந்த வாரியாக பார்க்காமல் இதற்கு பின்னே ஏற்படக்கூடிய பின் விளைவுகளில் இருந்துதான் இவை பற்றி நோக்கப்பட வேண்டும்.
இது ஒரு கண்ணுக்கு புலப்படாத யுத்தமாகவே அமைகிறது. இது ஒரு இரகசிய யுத்தம். இந்த இரகசிய யுத்தம் இன்று உலகம் தழுவிய அரசியல் அதிகார முகாமைத்துவத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது.
இந்த அடிப்படையில்தான் ஈழத் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்டது மாத்திரமல்ல அவர்களுடைய தேசிய கட்டுமானத்தை சிதைப்பதுதான் பெரும்பான்மை தேசத்தின் மூலோபாயமாக அமைந்துள்ளது.
அதற்கு அவர்கள் இரகசிய யுத்தத்தை நடத்துகிறார்கள். அந்த இரகசிய யுத்தத்தை (secret war) பல்வேறு நாடுகளின் நிபுணத்துவத்தின் பங்களிப்புடனும் உதவியுடன் நடத்துகிறார்கள்.
அது எவ்வாறெனில் தமிழ் அரசியல் கட்சிகளைப் பிரிப்பது, கட்சிகளுக்கு உள்ளே குழப்பங்களை விளைவிக்க செய்வது, அரசியல் தலைவர்களுடைய முரண்பாடுகளை தோற்றுவிப்பது, தமிழர்களை இலக்கில் இருந்து திசை திருப்புவது போன்ற செயற்பாடுகள் மூலம் ஒரு இரகசிய யுத்தம் ஈழத் தமிழர்கள் மீது பிரயோகிக்கப்படுகிறது.
இந்த இரகசிய யுத்தத்திற்கு ஈழத் தமிழ் தலைவர்களும் ஈழத் தமிழர்களும் கருவிகளாக பயன்படுத்தப்படுகிறார்கள்.
எனவே இத்தருணத்தில் ஈழத் தமிழ் தலைவர்கள் மேற்படி உலக அனுபவத்திலிருந்து பாடங்களைக் கற்று தம்மை முற்றிலும் அரசியல் அறிவியல் மயப்படுத்தி தமிழ் மக்களை ஒரு கொள்கையின் கீழ் ஐக்கியப்படுத்துவதன் மூலமே தமிழ் தேசிய இனத்தின் தேசிய அபிலாசைகளை வென்றெடுக்க முடியும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 26 May, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.