காற்றுவெளிக் கிராமத்தில் ஒரு கண்ணகியம்மன்
கடந்த வாரம் புங்குடுதீவில் நடந்த கண்ணகியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை நோக்கிப் புலம்பெயர்ந்த தமிழர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்தார்கள். 1991ஆம் ஆண்டு தீவில் நிகழ்ந்த இடப்பெயர்வுகளின் பின் புங்குடுதீவை நோக்கி இவ்வளவு தொகையான மக்கள் திரண்டு வந்தமை இதுதான் முதல் தடவை.
அண்மைய ஆண்டுகளில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இவ்வாறு வெவ்வேறு நிகழ்வுகளை நோக்கி ஒன்றுதிரளக் காணலாம்.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டுக் கொண்டாட்டம், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, பரியோவான் கல்லூரி,சில நாட்களுக்கு முன் மெத்தடிஸ்ட் மகளிர் கல்லூரி போன்றன தமது இருநூறாவது ஆண்டு விழாவை கொண்டாடியபோது பழைய மாணவர்களும் உட்பட புலம்பெயர்ந்த தமிழர்கள் அந்த நிகழ்வுகளை நோக்கித் திரண்டார்கள்.
புலம்பெயர்ந்த தமிழர்கள்
மிகச் செழிப்பாக பண உதவிகளைச் செய்தார்கள். சில பாடசாலைகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் வழங்கும் உதவிகள் கோடிக்கணக்கானவை. கண்ணகி அம்மனுக்கும் அவ்வாறு கோடிக்கணக்காக காசு திரட்டப்பட்டிருக்கிறது. கிடைக்கும் தகவல்களின்படி அக்கோவிலை புனரமைப்பதற்கு கிட்டத்தட்ட 90கோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கோயிலின் ஒவ்வொரு தூணுக்கும் தலா 5 இலட்சம் ரூபாய் புலம்பெயர்ந்த ஊர்வாசிகளிடமிருந்து திரட்டப்பட்டிருக்கிறது. மொத்தம் 200ற்கும் குறையாத தூண்கள் அங்கே உண்டு. கும்பாபிஷேகத்திலன்று ஒரு புலம்பெயர்ந்த தமிழர் கிட்டத்தட்ட ஏழரை இலட்சம் ரூபாய் செலவழித்து பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக ஐஸ்கிரீம் விநியோகித்தார்.
சனத்தொகை பற்றாக்குறை
கடந்த மூன்று தசாப்தங்களின் பின் புங்குடுதீவை நோக்கி ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்த ஒரு நிகழ்வு அது. இலங்கைத்தீவில் மட்டுமல்ல இப்பிராந்தியத்திலேயே ஆளில்லா வீடுகள் அதிகமுடைய ஒரு பிரதேசமாக தீவுப்பகுதியைக் குறிப்பிடலாம்.
குறிப்பாக புங்குடுதீவில் உத்தியோகப்பற்றற்ற தகவல்களின்படி 4000க்கும் சற்று அதிகமான மக்கள் வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது. பேராசிரியர் குகபாலன் 4000க்கும் குறைவான மக்களே அங்கே இருப்பதாகக் கூறுகிறார். புங்குடுதீவும் உட்பட பெரும்பாலான தீவுப்பகுதிகளில் சனத்தொகை குறைவு.
ஆளற்ற வீடுகளே அதிகம். ஒரு காலம் தேவாலயங்களின் பட்டினம் என்று வர்ணிக்கப்பட்ட ஊர்காவற்துறை இப்பொழுது கைவிடப்பட்ட வீடுகளின் பட்டினமாக மாறிவிட்டது. அங்கெல்லாம் பழம்பெரும் வீடுகளைச் சூழ்ந்து காடு வளர்ந்து கிடக்கின்றது.
அப்படித்தான் நெடுந்தீவிலும். தீவுகளில் சன நடமாட்டம் குறைந்த காரணத்தால் அங்கே குற்ற செயல்களுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
வித்யா படுகொலை சம்பவம்
புங்குடுதீவில் வித்யா படுகொலை, நெடுந்தீவில் புலம்பெயர்ந்தவர்களும் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டமை, அனலைதீவில் புலம்பெயர்ந்த தமிழர் கொல்லப்பட்டமை போன்றவற்றை இங்கு சுட்டிக்காட்டலாம். தீவுகள் இடம்பெயரத் தொடங்கியது போரினால் மட்டும் அல்ல. பொருளாதாரக் காரணங்களுக்காகவும்தான்.
குடிநீர் ஒரு முக்கிய பிரச்சினை. அதுதவிர கல்வி, மருத்துவ,தொழிற் தேவைகளுக்காகவும் மக்கள் அங்கிருந்து இடம்பெயர்த்தார்கள். இப்பொழுதும் இடம்பெயர்கிறார்கள். அயலில் ஆட்கள் இல்லையென்றால் தனித்து விடப்பட்ட வீடுகளுக்கு இயல்பாகவே பயம் தொற்றிக் கொள்ளும். அது மேலும் இடப்பெயர்வை ஊக்குவிக்கும்.
போர், இடப்பெயர்வை வாழ்வின் ஒரு பகுதியாக்கியது. போர்க்காலத்தில் மக்கள் தொகையாக இடம்பெயரும் ஒரு போக்கு முதலில் தீவுகளில்தான் தொடங்கியது. முதலில் காரைநகர்.
காற்றுவெளிக் கிராமம் மக்கள் இடப்பெயர்வு
அதன்பின் லைடன்தீவுகள் என்று அழைக்கப்படும் ஊர்காவற்துறையும் உள்ளிட்ட தீவுகள். முடிவில் முழு யாழ்ப்பாணமும் இடம்பெயர்த்தது.
இவ்வாறு ஆளற்றுப்போன தீவுகளைப்பற்றி புங்குடுதீவைச் சேர்ந்த கவிஞர் சு.வில்வரத்தினம் எழுதிய கவிதைத் தொகுப்புக்குப் பெயர் “ காற்றுவெளிக் கிராமம்” தீவுகளில் இருந்து மக்கள் மேலும் வெளியேறுவார்களாக இருந்தால் அங்கு ஒரு மாகாண சபை உறுப்பினரைக்கூட தெரிவு செய்வதற்கு ஆட்கள் இல்லாமல் போய்விடும்.
ஒரு காலம் அங்கே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்யுமளவுக்கு 36 ஆயிரத்துக்கும் குறையாத வாக்காளர்கள் வசித்தார்கள். எனவே தீவுகளை நோக்கி எப்படி ஆட்களை கொண்டு வரலாம் என்று சிந்திப்பதே தீவுகளில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் முன்னால் உள்ள முக்கிய பொறுப்பாகும்.
அபிவிருத்தி திட்டங்கள்
ஒரு நாள் திருவிழாக்கள்,சில நாள் கொண்டாட்டங்களை நோக்கி மக்களைத் திரட்டுவதற்குமப்பால், தமது தாய்க் கிராமத்தை நோக்கி என்றென்றும் மக்கள் திரளக்கூடிய பொருளாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும்.
தமிழ்ப் புலப்பெயர்ச்சியின் தொடக்க காலத்திலேயே தீவுகளைச் சேர்ந்தவர்கள் அதிகமாகப் புலம்பெயர்ந்தார்கள்.
அவர்களில் சிலர் தமது சொந்தத்தீவுகளில் தனிப்பட்ட முறையில் தங்களால் இயன்ற அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். எழுவைதீவில் மருத்துவர் நடேசன் கட்டிய வைத்தியசாலை அனலைதீவின் நீட்சியாகவுள்ள புளியந்தீவில், ஒரு வீடமைப்புத் திட்டம், புங்குடுதீவில் சுற்றுச்சூழல் மேம்பாட்டு திட்டங்கள் போன்ற சில உதாரணங்களை இங்கு சுட்டிக்காட்டலாம்.
வடமாகாணசபை இயங்கத் தொடங்கியபோது, முதலமைச்சரிடம் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் பா.அகிலன் தீவுகளை மையமாகக் கொண்ட ஒரு சுற்றுலாத் திட்டத்தை முன்வைத்தார்.
தீவுகளின் தனித்துவ பாரம்பரியம்
ஒவ்வொரு தீவிலும் எது தனித்துவமானதோ, அதை மையமாகக் கொண்டு சுற்றுலா வலையமைப்பு ஒன்றை உருவாக்குவது ஒவ்வொரு தீவிலும் என்னென்ன பாரம்பரிய உணவு வகைகள் கிடைக்குமோ அவற்றுக்குரிய உணவகங்களை உருவாக்குவது தீவுகளை இணைக்கும் படக்குச்சேவைகளை அல்லது மிதக்கும் விருந்தகங்களை உருவாக்குவது.
ஆனால் அத்திட்டத்தை வடமகாணசபை அதிகாரிகள் ஆர்வத்தோடு அணுகவில்லை என்று தெரிகிறது. அதுபோலவே சில ஆண்டுகளுக்கு முன் மூன்று தீவுகளை மையமாகக் கொண்டு மீளப்புதுப்பிக்கும் எரிசக்தித் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டது.
அந்தத் திட்டம் முதலில் சீனாவிடம் கொடுக்கப்பட்டது. பின்னர் இந்தியாவின் எதிர்ப்புக் காரணமாக அது இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளிலும் அவ்வாறு மீளப்புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்கள் நிறுவப்படும்.
ஆனால் இந்தியா அத்திட்டங்களைப் பொறுப்பெடுத்த பின் இலங்கை அரசாங்கம், நிர்வாக மற்றும் தொழில் நுட்ப ரீதியிலான முட்டுக்கட்டைகள் உருவாக்கிவருவதாகச் ஒரு தகவல் தீவுகளை மையமாகக் கொண்டு ஏற்கனவே உருவாக்கப்பட்ட கடலட்டை பண்ணைகளும் விவாதப்பொருட்களாக மாறின.
புவிசார் அரசியல் போட்டி
கடலட்டை, மீளப்புதுப்பிக்கும் எரிசக்தித் திட்டங்கள் போன்றவற்றின்மூலம் தீவுப்பகுதியின் சனக்கவர்ச்சி அதிகரிக்குமா என்று தெரியவில்லை. ஆனால் புவிசார் அரசியல் போட்டிக்குள் தீவுகளும் சிக்குண்டு விட்டன என்பது மட்டும் தெரிகின்றது.தீவுகளுக்கென்று தனித்துவம் உண்டு.
அதில் முக்கியமானது, தீவுகளில் இருந்து எழுச்சிபெற்ற கவர்ச்சிமிகு வணிகப் பாரம்பரியம் ஆகும். தீவுகளைச் சேர்ந்த வணிகர்கள் முறைசார் படிப்புக்களுக்கூடாக வந்தவர்கள் அல்ல. ஆனால் பரம்பரை பரம்பரையாக திரட்டப்பட்ட பட்டறிவுக்கூடாக பெரு வணிகர்களாக எழுந்தவர்கள்.
தீவுகளுக்கேயான தனித்துவம்மிக்க, நூதனமான அந்தப் பட்டறிவை முறைசார் புலமைப் பரப்புக்குள் உள்வாங்கினால் என்ன? தீவுகளை மையமாகக் கொண்டு வணிகக் கல்லூரிகளை உருவாக்கினால் என்ன? எதைச் செய்தால் தீவுகளை சனக்கவர்ச்சி மிக்கவைகளாக மாற்றலாம்? ஒவ்வொரு ஆண்டும் நயினாதீவை நோக்கி இலட்சக்கணக்கானவர்கள் வருகிறார்கள்.
ஆனால் அவர்கள் எல்லாரும் வில்வரத்தினத்தின் காற்று வெளிக் கிராமங்களை கடந்துதான் போகின்றார்கள். கண்ணகியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக உள்ளூரில் வேலைக்கு ஆட்களைப் பெற்றுக்கொள்வதில் நிறையத் தடைகள் இருந்ததாகக் கூறப்படுகின்றது.
தமிழர் சமூகத்தின் நிலையற்ற கதி
கோயிலைத் துப்புரவாக்குவதற்கு உள்ளூரில் ஆட்களைப் பிடிப்பது கஷ்டமாக இருந்ததாம். தீவுகளில் மட்டுமல்ல யாழ்ப்பாணத்திலும் நிலைமை அதுதான். சுவாமி தூக்க ஆளில்லை. சில ஆண்டுகளுக்கு முன் புங்குடு தீவில் வில்வரத்தினத்தின் நினைவு நாளைக் கொண்டாடினார்கள்.அம்பலவாணர் அரங்கில் கால்வாசிக்குக்கூட மக்கள் நிரம்பவில்லை.
அதிலும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவர்களே அதிகம். ஆனால் நீண்ட ஆண்டுகளின் பின் கண்ணகியம்மன் கோயிலை நோக்கி புங்குடுதீவு மீண்டும் திரண்டு வந்திருக்கிறது. கண்ணகியம்மன் கோவிலுக்கு வேறு ஒரு முக்கியத்துவமும் உண்டு. 1971 ஆம் ஆண்டு அங்கு நடந்த சாதி எதிர்ப்புப் போராட்டம் பிரசித்தமானது.
ஈழத் தமிழர்கள் மத்தியில் தோன்றிய மிக முக்கியமான
சிந்தனையாளர்களில் ஒருவரும் வில்வரத்தினத்தின் ஆசிரியருமான மு.தளையசிங்கம் அப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்குள்ள கிணற்றில் சாதிரீதியாகத் தாழ்த்தப்பட்டவர்கள் நீர் அள்ளுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதை எதிர்த்துத் தளையசிங்கம் போராடினார்.
ஒருகாலம் சாதிரீதியாக தாழ்த்தப்பட்டவர்களை ஆலையங்களுக்குள் அனுமதிக்க மறுத்தவர்களுக்கும் குடி நீர்க்கிணறுகளைத் தடுத்தவர்களுக்கும் எதிராகப் போராட வேண்டியிருந்தது.
ஆனால் இன்றைக்கு அவ்வாறு தடுத்தவர்களின் ஆளில்லா வீடுகளில் சாதி ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்களே வந்து குடியிருக்கும் ஒரு நிலை.
ஆனால் அந்த வீடுகளை அதில் இப்பொழுது குடியிருப்பவர்களுக்கு சொந்தமாக எழுதிக் கொடுப்பதற்கு வீட்டின் உரிமையாளர்கள் தயாரில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
அதேசமயம் ஊர்காவற்துறை கரம்பன் மேற்கில் புலம்பெயர்ந்த தமிழர்கள் இருவர் தமது காணிகளை 12 காணியில்லாத குடும்பங்களுக்குப் பகிர்ந்து கொடுத்திருக்கிறார்கள்.
எனினும், பூதங்காக்கும் காணிகள் பலவற்றை அவ்வாறு கொடுப்பதற்கு மனமில்லாத ஒரு தொகுதியினர் பங்குத் தந்தையிடமும் ஆயர் இல்லத்திடமும் தமது காணி உறுதிகளை கொடுத்து வைத்திருப்பதாக ஒரு புலம்பெயர்ந்த தமிழர் குற்றஞ்சாட்டினார்.
ஒருபுறம் தமிழ்ச் சமூகத்தில் நிலமற்ற வீடற்ற மக்கள். இன்னொரு புறம் புதர் மண்டிக் கிடக்கும் பெரு மாளிகைகள். ஒருபுறம் தேவையோடு தவிக்கும் தாயக மக்கள்.
வாழ்வாதார பிரச்சினை
இன்னொருபுறம் தாயகத்தைப் பிரிந்த பிரிவேக்கத்தோடு காசை என்ன செய்வது என்று தெரியாமல் கொட்டிச் சிந்தும் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம்.நாட்டைப் பிரிந்த பிரிவேக்கத்தோடு நாட்டுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் விரும்புகிறார்கள்.
ஆனால் அவர்களிடம் உள்ள அளவற்ற செல்வத்தையும் தாயகத்தில் காற்றுவெளிக் கிராமங்களின் தேவைகளையும் பொருத்தமான அபிவிருத்தி திட்டங்களின்மூலம் இணைப்பதற்கு யார் உண்டு?
குறிப்பாக, புங்குடுதீவில் குடிநீர் ஒரு பிரச்சினை.
ஒரு சிறிய குடிநீர்ச் சுத்திகரிக்கும் நிலையத்தை நிர்மாணிப்பதற்கு கிட்டத்தட்ட 40 இலட்சம்வரை தேவை என்று கணிப்பிடப்படுகிறது.
கண்ணகியம்மனுக்காக செலவழிக்கப்பட்ட தொகையோடு ஒப்பிட்டால் இது மிகச்சிறியது.
கோவில் தூண் ஒன்றுக்காக காசு கொடுத்த எட்டுப் பேர் சேர்ந்தால் ஒரு நீர் விநியோகத் திட்டத்தை நிறுவலாம். புங்குடுதீவு மருத்துவமனையில் இப்பொழுதுள்ள மூன்று மருத்துவர்கள் உண்டு. அவர்களில் ஒருவர் சிங்களவர். அவர்தான் பொறுப்பதிகாரி. அண்மை ஆண்டுகளில் அவ்வாறு சிங்கள மருத்துவர்கள் தீவுகளுக்கு நியமிக்கப்படும் ஒரு நிலைமை. சிங்கள மருத்துவர்கள்தான் அதற்குத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் பற்றாக்குறை
கணித விஞ்ஞான பிரிவுகளைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அங்கே குறைவு.
பிள்ளைகள் யாழ்ப்பாணம் நகரத்துக்குத்தான் வர வேண்டும்.
அல்லைப்பிட்டியில் கிறீஸ்தவ திருச்சபையினரால் கட்டப்பட்ட ஒரு சர்வதேசப் பாடசாலை உண்டு. அது மதம் மாற்றும் நோக்கத்தோடு கட்டப்பட்டது என்று சில இந்துக்கள் குற்றஞ் சாட்டுகிறார்கள்.
அப்படியென்றால் கோவில்களைப் புனரமைக்கும் காசில் பள்ளிக்கூடங்களைக் கட்டலாம். அறப்பணிகளைச் செய்யலாம். நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவலாம். தீவுகளின் சனக் கவர்ச்சியைக் கூட்டலாம். புலம்பெயந்த தமிழர்களையும் தாயகத்தையும் ஒருங்கிணைப்பது அல்லது தேவைகளையும் வளங்களையும் ஒருங்கிணைப்பது என்பது தேச நிர்மாணத்தின் ஒரு பகுதிதான்.