சட்டத்தரணிகள் குழாமொன்று சம்பூர் பகுதிக்கு விஜயம்
மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான மையத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி இரட்ணவேல் தலைமையில் சட்டத்தரணிகள் குழாம் ஒன்று இன்றைய தினம் சம்பூர் பகுதிக்கு விஜயம் செய்துள்ளது.
மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிக்கு சென்று, இவர்கள் குறித்த பகுதியை பார்வையிட்டதோடு, அக்கிராம மக்களுடனும் உரையாடியிருந்தனர்.
எலும்புப்பகுதிகள் கண்டெடுப்பு
சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) குறித்த பகுதியில் இருந்து சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புப்பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து கடந்த 23ஆம் திகதி குறித்த பகுதியை மூதூர் நீதிமன்ற நீதிபதி மற்றும் அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
மூதூர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு
இதன்போது, சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் திணைக்களத்திடம் குறித்த பகுதியில் அகழ்வுப்பணியை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று (30) அறிக்கை பெறப்பட்டு எதிர்வரும் 6ஆம் திகதி குறித்த இடத்தில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பாக ஆராய்வதற்கான சட்ட மாநாடு ஒன்றை நடத்துவதற்காகவும் நேற்றைய தினம் (30) மூதூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.







