யாழில் கையடக்கத் தொலைபேசிகளை தொடர்ச்சியாக திருடிவந்த கும்பல் கைது
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் பயணம் செய்தவர்களை இலக்கு வைத்து கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியான முறைப்பாடுகள்
பேருந்தில் பயணம் செய்பவர்களின் தொலைபேசிகள் திருட்டுப் போவது சம்பந்தமாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பட்டு வந்த நிலையில், யாழ்ப்பாண பொலிஸ் குற்றதடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி இந்திக்க தலைமையிலான குழுவினர் மூன்று நபர்களை கைது செய்துள்ளனர்.
யாழ். நகரை அண்டிய வண்ணார் பண்ணை, பிரப்பங்குளம் சிவலிங்கபுளியடியை சேர்ந்த 24, 31, 33 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மேலும் திருட்டுப்போன பல கையடக்க தொலைபேசிகளை மீட்கவுள்ளதாக தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |