முன்னாள் போராளி ஒருவர் கைக் குண்டுடன் கைது
திருக்கோவிலிலிருந்து விற்பனைக்காக கைக்குண்டு ஒன்றை எடுத்துச் சென்ற முன்னாள் போராளி ஒருவர் களுவாஞ்சிக்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை - திருக்கோவிலிலிருந்து மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதிக்கு கைக்குண்டு ஒன்றை விற்பனைக்கு எடுத்துச் சென்ற இளைஞன் ஒருவரை களுவாஞ்சிக்குடி நகர்ப்பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் இன்று(13) பிற்பகல் கைது செய்துள்ளனர்.
கடற்படை புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினர் இவரைக் கண்காணித்து வந்த நிலையில் குறித்த நபர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் கைக்குண்டு ஒன்றை மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் விற்பனைக்காக எடுத்துக் கொண்டு பிரயாணித்த போது அவரை பின் தொடர்ந்துள்ளனர்.
இதனையடுத்து களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கும் பொலிஸ் விடுதிக்கும் இடையிலான பிரதான வீதியில், புலனாய்வு பிரிவினர் பின் தொடர்வதைக் கண்டு எடுத்துவந்த குண்டை அந்தப்பகுதியில் வீசி எறிந்துவிட்டுத் தப்பியோட முயற்சித்துள்ளார்.
இதன்போது அவரை விசேட அதிரடிப்படையினரும் புலனாய்வு பிரிவினரும் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளதாக விசேட அதிரடிப்படையினரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் கைது செய்யப்பட்டவர் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் எனவும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணையை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருவதாகவும் விசாரணையின் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.





