இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் அந்நியச் செலாவணி பணம் அனுப்புவதில் வீழ்ச்சி
கடந்த ஆண்டு (2021) முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (2022) அந்நியச் செலாவணி பணம் அனுப்பும் வருமானம் 53.1 சதவீதம் குறைந்துள்ளது.
இதனால் கடந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 2846 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட அந்நியச் செலாவணி வருமானம் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 1336 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.
மே மாதத்தில் அந்நிய செலாவணி வருமானத்தில் அதிகரிப்பு
மேலும், கடந்த ஆண்டு மே மாதத்தில் 460 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த அந்நியச் செலாவணி அனுப்பும் வருமானத்தின் மதிப்பு, இந்த ஆண்டு மே மாதத்தில் 304 மில்லியன் அமெரிக்க டொலர்களாக 33.9 சதவீதம் குறைந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பெறப்பட்ட 249 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மே மாதத்தில் அந்நிய செலாவணி அனுப்பும் வருமானத்தில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
முறைசாரா சந்தைக்கும் உத்தியோகபூர்வ நாணய மாற்று வீதத்திற்கும் இடையிலான இடைவெளி குறைவதோடு, உள்ளூர் அந்நியச் செலாவணி சந்தையில் காணப்படும் ஸ்திரத்தன்மை, பணம் அனுப்பும் வருமானம் அதிகரிப்பதற்கு பிரதானமாக வழிவகுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.