பயிர்களுக்கு களையாகும் மூலிகைச் செடி: ஈழத்து விவசாயிகளின் அவதானிப்பு
யூரியாவுக்கு நிகரான மாற்றத்தினை பயிர்களில் ஏற்படுத்தக் கூடிய நைதரசன் பதிக்கும் தாவரங்கள் பயிர் நிலங்களில் பரவி வளர்ந்துள்ளது தொடர்பில் விவசாயிகள் தங்கள் அவதானிப்புக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
வளமற்ற மண்ணில் இவை வளரும் போது அந்த மண் வளமாக மாறிப்போவதனை அவதானித்ததாக பயிர்ச்செய்கை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தொட்டாச்சுருங்கி, சணல்,தகரை, சாந்தியும் ஸ்ட்ரூமரியம் போன்றவற்றைக் குறிப்பிடும் அவர்கள் இவை வளர்ந்த பின் உழுது பயிர் செய்யும் போது அப்பயிர்களுக்கு குறைந்தளவு நைதரசன் பசளை போதுமானதாக இருக்கின்றது .
வயல் நிலங்களில்
ஒவ்வொரு பெரும் போகத்திலும் வயல்களில் நெல் பயிரிடப்பட்டு அறுவடையின் பின்னர் அடுத்த போகத்திற்குள்ள சிறிய இடைவெளியில் வயல் நிலங்களில் சாந்தியும் ஸ்ட்ரூமரியம் வளர்ந்து விடுகின்றது.
ஆரம்பத்தில் அது களையாக பயன்பாடற்ற புல்லாகவே தான் கருதியிருந்ததாகவும் ஆனாலும் தொடர்ந்து வந்த பயிர்ச்செய்கைகளின் போது சாந்தியும் ஸ்ட்ரூமரியம் வளர்ந்த நிலங்களில் உள்ள நெல் பயிர்கள் ஏனைய இடங்களில் உள்ள நெல் பயிர்களைவிட நல்ல வளர்ச்சியை காட்டியிருந்தன.
அதன் பின்னர் இந்த புல்லை வயல் நிலங்களில் மண்ணோடு சேர்த்து உழுது விடுவதாக விவசாயி ஒருவர் குறிப்பிட்டார்.
சாந்தியும் ஸ்ட்ரூமரியம் வேரின் மூலம் நைதரசனை மண்ணுக்கு சேர்க்கும் ஒரு தாவரமில்லை. தன்னுடைய உடலில் நைதரசனை அதிகம் கொண்ட ஒரு தாவரமாக இருக்கின்றது. இதனை மற்றொரு விவசாயியின் அவதானம் மூலம் அறிய முடிகிறது.
வயல் விதைப்புக்காக நிலத்தினை உழுது பண்படுத்த முயலும் போது காதல்காய் செடி (சாந்தியும் ஸ்ட்ரூமரியம்) வளர்ந்த நிலங்களில் இருந்து அவற்றை அகற்றி குவித்து எரித்து விடுவதுண்டு.சில சமயங்களில் அவ்வாறு குவித்த காதல்காய்ச் செடிகள் முழுமையாக எரிந்து கொள்ளாத சந்தர்ப்பங்களும் உண்டு.நிலத்தை உழுது விடும் போது மண்ணோடு அவையும் சேர்ந்து போகும்.
நெல் முளைத்து வளரும் போது காதல் காய்ச்செடி இருந்த இடங்களில் உள்ள பயிர் நல்ல பச்சை நிறத்தோடு விரைவான வளர்ச்சியையும் காட்டி விடுகின்றது.
வயல் நிலத்தில் ஏனைய இடங்களில் உள்ள நெல்லின் வளர்ச்சி இவற்றை விட குறைந்தளவில் இருக்கும்.யூரியா பசளையினை பயன்படுத்தியே அவற்றின் வளர்ச்சியை பேணுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த முடிவுக்கு மற்றொரு விவசாயியின் செயற்பாட்டு அவதானமும் உறுதுணையாகின்றது.
வயல் நிலத்தில் சாந்தியும் ஸ்ட்ரூமரியம் அதிகளவில் வளர்ந்து இருந்தது.அவற்றை அகற்றி நிலத்தை துப்பரவு செய்து விட்டு முதல் பண்படுத்தலாக உழவினைச் செய்து விட்டு சில நாட்களின் பின்னர் மீண்டும் உழுது நெல்லை விதைத்து உழுது விடும் விவசாய நடைமுறையினை மானாவரித் தரைகளில் வழமையாக கொண்டுள்ளனர்.
தனக்குள்ள நேரமின்மையால் தான் முதல் உழவிலேயே காதல் காய்ச்செடி எனப்படும் சாந்தியும் ஸ்ட்ரூமரியத்தை மண்ணோடு புதையுண்டு போகும்படி உழுது விட்டு, நெல்லை எறிந்து மீண்டும் உழுது விடுவதாகவும் அதனால் இச்செடிகள் இரண்டாவது உழவின் போது வயல் நிலங்களில் இடையிடையே குவிந்து கிடப்பதுண்டு. பயிர் வளரும் போது காதல்காய்ச் செடிகள் குவிந்து உக்கலடைந்து கிடக்கும் இடங்களில் பயிரின் வளர்ச்சி யூரியா போட்ட போது ஏற்படும் வளர்ச்சியைப் போல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காதல் காய்ச் செடி விவசாயத்திற்கு எந்தளவிற்கு பயன்படக்கூடிய தாவரமாக இருக்கின்றது என்பது பற்றிய தேடலின் போது விவசாயிகளிடையே அச்செய்தி தொடர்பாக சுட்டிக்காட்டி அவர்களது அனுபவத்தினை பெற்றிருந்தேன் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
திட்டமிட்ட பரிசோதனைகள்
இந்த அவதானக் குறிப்புக்கள் இலிருந்து உக்கலடைந்த சாந்தியும் ஸ்ட்ரூமரியம் அதிகளவில் மண்ணில் சேர்க்கப்படும் போது அந்த மண்ணின் வளம் யூரியா பசளையினை இடும் போது கிடைக்கும் நைதரசனின் அளவிற்கு ஈடுகொடுக்கின்றது என்ற முடிவுக்கு வரலாம்.
எனினும் இது அவதானிப்பு அடிப்படையிலானது.பரிசோதனையின் அடிப்படையில் மீண்டும் ஒரு முறை சோதிக்கப்பட்டது இறுதி முடிவுக்கு வரவேண்டியது அவசியமாகும்.
இக்கட்டுரையின் சுட்டிக்காட்டல்கள் மூலம் அறிவிலாராட்சியில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த தகவல்கள் பரிசோதனை முயற்சிக்கான ஆரம்பத்தகவலாக கொள்ள முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலத்தில் இருந்த செடி
விவசாய நிலங்களில் ஆரம்ப காலங்களில் தகரையும் தொட்டாச்சுருங்கியும அதிகளவில் மண்ணில் இருந்து செடிகளாக விவாசய முதுசங்கள் குறிப்பிடுவதும் இங்கே நோக்கத்தக்கது.
இவ்விரு செடிகளும் வேர்முடிச்சுக்களை அதிகளவில் கொண்ட தாவரங்கள் ஆகும்.
வேர்முடிச்சுக்களில் உள்ள றைசோபியம் பக்றீரியா வளிமண்டல நைதரசனை மண்ணுக்கு சேர்ப்பதால் இந்த தாவரங்கள் வளரும் மண் அதிகளவு நைதரசனைக் கொண்டதாக இருக்கின்றது.
வேர் முடிச்சுக்களைக் கொண்ட தாவரங்கள் வளமற்ற மண்ணிலும் வளமாக வளரக் கூடியன என விவசாய பாட ஆசிரியர் ஒருவர் தகரை, தொட்டாற்ச்சுருங்கி போன்ற தாவரங்களின் நைதரசன் வளமாக்கல் தொடர்பில் கேட்ட போது குறிப்பிட்டிருந்தார்.
நிலக்கடலை, பயறு , உழுந்து போன்ற பயிர்கள் வேர் முடிச்சுக்களை அதிகம் கொண்ட தாவரங்கள் எனவும் அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள் எல்லாம் றைசோபியம் பக்றீரியாவை வேர் முடிச்சுக்களில் அதிகளவில் கொண்டவை என்றும் குறிப்பிட்டு விளக்கியிருந்தார்.
வன்னியில் 2009 க்கு முன்னர் அதிகளவில் பயிர் நிலங்களில் இருந்த தகரையும் தொட்டாச் சுருங்கியும் இப்போது அருகில் போய் சாந்தியும் ஸ்ட்ரூமரியம் என்றழைக்கப்படும் காதல் காய் செடி அதிகளவில் இருப்பதனை அவதானிக்கலாம்.இது எப்படி பரப்பலடைந்தது என தேடுவதும் அவசியமான ஒன்றாக இருக்கின்றது என குறிப்பிடும் சமூக விடய ஆய்வாளர்களும் உண்டு.
கூட்டெரு உற்பத்தி
தாவரப் பகுதிகளைக் கொண்டு கூட்டெரு உற்பத்தி செய்வதற்கு முயற்சிக்கும் சந்தர்ப்பங்களில் நைதரசனை அதிகம் கொண்ட தாவரப்பகுதிகளை பயன்படுத்தலாம்.
நிலக்கடலை,கிளுசூரியா, தகரை, தொட்டாச் சுருங்கி,காதல் காய் செடி போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும்.இதனால் அந்த கூட்டெரு அதிகளவான நைதரசன் உள்ளடக்கத்தினைக் கொண்டிருக்கும்.
விலங்குக் கழிவுகளோடு தாவரக் கழிவுகளையும் சேர்த்து ஆக்கப்படும் கூட்டெரு சேதனப் பசளையாகும்.இந்தழகைப் பசளையினை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் காய்கறி பழங்கள் உடல் நலத்திற்கு நன்மை பயக்கக் கூடியவை.
காதல் காய்ச் செடி
பரவலாக இளையவர்களால் காதல் காய்ச்செடி என அழைக்கப்படும் இந்த இத்தாவரத்தின் விஞ்ஞானப் பெயர் சாந்தியும் ஸ்ட்ரூமரியம் ஆகும். வட அமெரிக்காவை தாயகமாக கொண்ட இது ஒரு ஆக்கிரமிப்புத் தாவரம் என்பதும் நோக்கத்தக்கது.
காக்லெபர் என பொதுப் பெயரால் அழைக்கப்படும் சாந்தியும் ஸ்ட்ரூமரியம் அல்லது சாந்தியும் ஸ்பினோசம் என்ற இந்த தாவரம் சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். Heliantheae பழங்குடி மக்களின் Xanthium என்ற பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்ததாகும்.
நிலக்கடலை, சோளம் போன்ற பயிர்ச் செய்கைகளின் போது களைத் தாவரமாகவும் இனங் காணப்படும் இது தென்னாபிரிக்காவில் தடைசெய்யப்பட்ட அழிக்கப்பட வேண்டிய தாவர இனமாகவும் பயிர்கள் மற்றும் விலங்குகளுக்கு நச்சுச் செடியாகவும் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.
ஆயினும் முழுத் தாவரமும் மருந்தாகப் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.
வேர்,பழங்களை ஆயுர்வேத மருத்துவத்தில் மலமிளக்கி, கொழுப்பை உண்டாக்குதல், ஆன்டெல்மிண்டிக், அலெக்சிடெரிக், டானிக், செரிமானம் மற்றும் ஆண்டிபிரைடிக் பண்புகளைக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இதற்காக இந்த சாந்தியம் ஸ்ட்ரூமரியத்தில் குளிர்ச்சியான இயல்பு பயன்பாடு மிக்கதாக அமைகின்றது.
அத்துடன் நினைவாற்றல், பசியின்மை, குரல், சருமம் போன்றவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
லுகோடெர்மா, பித்தம், பூச்சி கடி விஷம், கால் மற்றும் கை வலிப்பு, உமிழ்நீர் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதற்காக பயன்படுத்தப்படுவதாக சித்த மருத்துவ குறிப்புக்களில் இருந்து அறிய முடிகின்றது.
எனினும் இந்த தாவரத்தின் வித்து நேரடியாக உண்பதற்கு உகந்ததல்ல.அது அதிக நச்சுத் தன்மையைக் கொண்டுள்ளது.
இந்த தாவரம் ஒரு வித்தினுள் இரு அறைகளைக் கொண்டுள்ளது. இந்த இரு உறைகளிலும் இரு வித்துக்களை சாந்தியும் ஸ்ட்ரூமரியம் கொண்டுள்ளது.
ஒரு வித்து முதலிலும் அடுத்த வித்து அடுத்த வருடத்திலும் முளைக்கும் வகையில் இசைவாக்கத்தினைக் கொண்டுள்ளது.
மேல் வித்து கீழ் வித்து என அவை குறிக்கப்பட்டு அடையாளப்படுத்தப் பட்டுள்ளன.மேல் வித்து நீண்ட உறங்கு நிலையைக் கொண்டது.கீழ் வித்து குறுகிய உறங்கு நிலையைக் கொண்டது.
முதல் வருடத்தில் கீழ் வித்து முளைத்து நாற்றாகும்.அடுத்த வருடத்தில் மேல் வித்து முளைத்து நாற்றாகும்.இதனால் இந்த தாவரத்தினை விளை நிலத்தில் இருந்து அழிப்பதற்கு இரு தடவைகளில் முயற்சிக்க வேண்டும் என இந்த தாவரம் தொடர்பான அறிவியல் செய்திகளின் மூலம் அறிய முடிகிறது.
களையான போதும் கூட்டுப்பசளை தயாரிப்புக்கு சிறந்த செடியாக சாந்தியும் ஸ்ட்ரூமரியம் அமைந்துள்ளதனை தங்களின் அவதானிப்புகள் மூலம் ஈழத்து விவசாயிகள் அறிந்துள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.