கைக்குண்டை மரத்தில் தொங்க விட்ட துப்பரவு தொழிலாளி கைது
கைக்குண்டு ஒன்றை பொலிதீன் பையில் போட்டு கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் உள்ள பேருந்து தரிப்பிடம் ஒன்றுக்கு அருகில் உள்ள மரத்தில் தொங்க விட்டதாக கூறப்படும் துப்பரவு தொழிலாளியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிதீன் பையை மரத்தில் தொங்க விட்ட துப்பரவு தொழிலாளி, பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பின்னர், நடத்திய விசாரணைகளை அடுத்து சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொறன்துடுவ மஹா கோணதுவ பிரதேசத்தில் இருந்து வேலைக்கு வரும் போது வீதியில் இரும்பு உருளை போன்ற ஒன்று இருந்தாகவும் அதனை இரும்பு என நினைத்து விற்பனை செய்ய எடுத்துக்கொண்டதாகவும் மற்றுமொரு துப்பரவு தொழிலாளி அது கைக்குண்டு எனக்கூறியதால், அதனை பொலிதீன் பையில் வைத்து மரத்தில் தொங்க விட்டதாகவும் கைது செய்யப்பட்ட துப்பரவு தொழிலாளி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
65 வயதான சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தியதில் அவரிடம் இருந்து திருப்தியடைய கூடிய வகையில் தகவல்கள் கிடைக்காத காரணத்தினால், சந்தேக நபரை பயங்கரவாத விசாரணைப்பிரிவிடம் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



