மன்னாரில் மாபெரும் கடற்றொழிலாளர் போராட்டத்திற்க்கு அழைப்பு
கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையம் அறிவித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம்(23) இடம்பெற்ற வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டதிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள்
எல்லை தாண்டிய இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினை, உள்ளூர் இழுவைமடி பிரச்சினை, தடை செய்யப்பட்ட கடற்றொழில் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கட்டுப்படுத்தக் கோரியே இந்த போராட்டம் நடாத்தப்படவுள்ளது.
இதேவேளை வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்திற்கு புதிய நிர்வாகக்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் தலைவராக கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் பிரதிநிதி ஜோசப் பிரான்சிஸ் , செயலாளராக மன்னார் மாவட்டத்திலிருந்து கடற்றொழில் பிரதிநிதி முகமட் ஆலம், பொருளாளராக யாழ்ப்பாணத்திலிருந்து பிரியா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் உப தலைவராக முல்லைத்தீவு பிரதிநிதி தணிகாசலம், உப செயலாளர் மன்னார் மாவட்டத்திலிருந்து றீற்ரா வசந்தி தெரிவு செய்யப்பட்டதுடன் மாவட்ட தலைவர்களாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து இ. முரளிதரன், கிளிநொச்சியிலிருந்து அமலதாஸ், மன்னார் மாவட்டத்திலிருந்து அன்ரனி சங்கர், முல்லைத்தீவு அ.நடனலிங்கம், ஊடக பேச்சாளராக அன்னலிங்கம் அன்னராசா உட்பட 16 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 56 பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், பிரதம அழைப்பாளராக கலாநிதி சூசைதாஸன் , தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்க தேசிய அமைப்பாளர் கேர்மன் குமார ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.