கோட்டாபய ராஜபக்சவுக்கு அரசாங்கம் வழங்கிவரும் இலட்சக்கணக்கான பணம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் பணம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, கோட்டாபயவுக்கு அரசாங்கத்தினால் 19 வாகனங்களும், உணவு, பானங்கள் உள்ளிட்ட செலவுகளுக்காக மாதாந்தம் 950,000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் பந்துல குணவர்தன இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தைக் கூட வழங்க முடியாத சூழ்நிலையில் இவ்வாறான செலவை மேற்கொள்வது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நாட்டின் ஒட்டுமொத்த செலவீனங்களைப் பார்க்கும் போது இது ஒரு சிறிய செலவு மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.
போதிய வருமானம் இல்லாத நாடாக மாறியுள்ள இலங்கை
அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
1977ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்தின் செலவு வருமானத்தை விட அதிகமாக உள்ளது, அன்றாட செலவுகளுக்கு போதிய வருமானம் இல்லாத நாடாக நாம் வந்துள்ளோம்.
இந்த சிறிய செலவுகளைப் பார்க்கும் முன், பெரிய அளவிலான செலவுகளைப் பார்க்க வேண்டும். அதாவது அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கடன் வட்டி செலுத்துதல்.
இந்த பெரிய அளவிலான திட்டங்களில் எதையும் குறைக்க முடியாது. தற்போது, நாட்டின் அமைச்சர்கள் கூட அதிக அளவில் நன்கொடை அளித்துள்ளனர்.
நான் இப்போது நான்கு அமைச்சுக்களின் பாரத்தை தனியாளாக சுமந்து வருகிறேன். இதனால் எஞ்சும் தொகையை பாருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.