போதைப்பொருள் வேட்டை: ஒரே நாளில் 937 பேர் கைது
இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் ஜனாதிபதியின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசியத் திட்டத்தின் கீழ், நேற்றுமுன்தினம் (11.03.2026) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 937 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அன்றைய தினம் நாடு முழுவதும் 909 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இச்சோதனைகளின் போது கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையான 6 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கைப்பற்றல்
இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருள்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதற்கமைய, சந்தேகநபர்களிடமிருந்து, 494 கிராம் ஹெரோயின், 808 கிராம் ஐஸ், 21 கிலோகிராம் 689 கிராம் கஞ்சா, 14 ஆயிரத்து 927 கஞ்சா செடிகள், 690 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 510 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 1,950 போதை மாத்திரைகள், 369 கிராம் மதனமோதகம் மற்றும் 3 கிலோகிராம் 624 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தேசியத் திட்டத்தின் கீழ் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களைக் இலக்கு வைத்து பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து தொடர்ச்சியான சுற்றிவளைப்புகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறான திடீர் சோதனைகள் காரணமாக போதைப்பொருள் புழக்கம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.