ஆயுத கடத்தல் முயற்சி சிங்களவர்கள் உட்பட 9 இலங்கையர்கள் திருச்சி சிறப்பு முகாமில் கைது
ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை கடத்த முயற்சித்த வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 9 பேரை இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பின் அதிகாரிகள் நேற்று தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்துள்ளனர்.
குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை தடுத்து வைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் இயங்கி வருகிறது. இதில் 80 இலங்கைத் தமிழர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 132 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியா மற்றும் இலங்கைக்கு ஆயுதம், போதைப் பொருள் கடத்தல்
இந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியா மற்றும் இலங்கைக்கு ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தப்படுவது தொடர்பாக இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பு கடந்த ஜூலை 8 ஆம் திகதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கையர்களுக்கு மற்றும் ஆயுதங்கள், போதைப் பொருள் விற்பனையாளரான பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி சலீம் போன்றோருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தமிழகத்தில் சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு உட்பட 22 இடங்களில் இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பின் அதிகாரிகள் கடந்த ஜூலை 20 ஆம் திகதி தேடுதல்களை நடத்தினர்.
சிறப்பு முகாமில் தேடுதல்
திருச்சி சிறப்பு முகாமில், இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பின் துணை பொலிஸ் ஆணையாளர் காளிராஜ் மகேஷ்குமார் தலைமையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்மராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் குழு கொமண்டோ படையினரின் உதவியுடன் தேடுதல்களை நடத்தினர்.
இதன் போது சிறப்பு முகாமில் இருந்து 70 அலைபேசிகள், சிம் அட்டைகள், பென்டிரைவ், கணனி வன்பொருள் தட்டு, மடிக்கணனி, வைஃபை மோடம் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
அவற்றை கேரளா மாநிலத்திற்கு கொண்டு சென்ற தேசிய புலனாய்வு முகவர் அமைப்பின் அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பின் அதிகாரிகள் குழுவின் 8 அதிகாரிகள் நேற்று காலை மீண்டும் திருச்சி சிறப்பு முகாமுக்கு சென்று அங்கிருந்த இலங்கையைச் சேர்ந்த கிம்புலாஹெலே குணா என்ற குணசேகரன் பிரேம்குமார், புக்குடு கண்ணா என்ற புஷ்பராஜா , மொஹமட் அஸ்மின், கொட்டா காமினி என்ற அழகபெரும சுனில் காமினி பொன்சேகா, பொம்மா என்ற ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, தனுகா ரொஷன், லடியா, வெள்ளே சுரங்க என்ற காமேஷ் சுரங்க பிரதீப், திலீபன் ஆகிய 9 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, ஏற்கெனவே தொடரப்பட்ட ஆயுதக் கடத்தல் வழக்கில், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருப்பதால், 9 பேரையும் கைது செய்ய வந்திருப்பதாக தேசிய புலனாய்வு முகவர் அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்
இதனிடையே வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் தமிழக வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்மராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், திருச்சி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்துக்குச் சென்று ஆட்சியாளர் மா.பிரதீப்குமாருடன் ஆலோசனை நடத்தினர்.
இதன் போது, 9 பேர் மீதுள்ள வழக்கு விபரங்கள், கைது செய்வதற்கான உரிய ஆவணங்களை ஒப்படைக்குமாறு ஆட்சியாளர் கேட்டுக் கொண்டார்.
இதற்கமைய அதிகாரிகள் வழங்கிய ஆவணங்களை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியாளர், குணசேகரன் உட்பட 9 பேரையும் கைது செய்து சிறப்பு முகாமிலிருந்து அழைத்துச் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.
இதையடுத்து, குணசேகரன் உட்பட 9 பேரையும் இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பின் அதிகாரிகள் கைது செய்ததுடன் அவர்களை பலத்த பாதுகாப்புடன் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.
எது எப்படி இருந்த போதிலும் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இந்த சந்தேக நபர்கள் இலங்கையில் தேடப்பட்டு வரும் பிரபலமான போதைப் பொருள் கடத்தல்காரர்கள் என்பதுடன் பாதாள உலகக்குழுக்களின் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.