இலங்கையில் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 83 வைத்தியர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மருத்துவ பயிற்சி மற்றும் ஏனைய தேவைகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று பணிக்கு சமூகமளிக்காத 83 வைத்திய நிபுணர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக மருத்துவ சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் பிரியந்த அதபத்து தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சுக்கு தெரிவிக்காமல் வெளிநாடு சென்ற 83 விசேட வைத்தியர்கள் சேவையை கைவிட்டதாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக பொது கணக்குகளுக்கான நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.
இதன்படி வெளிநாட்டில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்று அண்மையில் விசேட வைத்தியராக மாறிய 250 பேரில், 50 பேர் வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
இவ்வாறு வெளிநாடு செல்பவர்கள் பிணைப்பணத்தை செலுத்த வேண்டும் எனவும், வெளிநாடு சென்றவர்களிடம் இருந்து பிணைப்பத்திரத்தை மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார்.
அனுமதியின்றி வெளிநாடுகளுக்குச் செல்லும் வைத்தியர்கள்
வெளிநாடு சென்றுள்ள வைத்தியர்களுக்கு நாடு திரும்புமாறு கடிதம் வழங்கப்படும் எனவும், கடிதம் வழங்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் அவர்கள் நாடு திரும்பாவிட்டால் சேவையை விட்டு வெளியேறுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்றக் குழு அதன் தலைவரும, இராஜாங்க அமைச்சருமான லசந்த அழகியவன்ன தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடியது. அந்த சந்திப்பில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகின.
இதேவேளை, இவ்வருடம் மே 31ஆம் திகதி வரையில் 677 வைத்தியர்கள் பயிற்சிக்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும், அடுத்த இரண்டு வருடங்களில் அவர்கள் நாடு திரும்ப வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன,
இவர்கள் வரும் வரை எதனையும் உறுதியாக கூற முடியாது. இந்த விசேட வைத்தியர்கள் வராத பட்சத்தில் சிறிய வைத்தியசாலைகள் பாதிக்கப்படலாம் எனவும் இது தொடர்பில் பரவலாக பேசப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 612 வைத்தியர்கள் பயிற்சிக்காக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகவும், பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவே வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதாகவும், பிள்ளைகளின் படிப்புக்கான பணத்தைத் தேடுவது மற்றுமொரு நம்பிக்கை எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பாதிப்பு
ஒப்பந்தத்தின் பிரகாரம் அவர்கள் இலங்கைக்கு திரும்பவில்லை என்றால் பயிற்சிக்காக செலவிடப்பட்ட மொத்த தொகையான ஒரு கோடியே ஐம்பது இலட்சம் பணத்தை மீளப் பெற்றுக் கொள்வதாக சுகாதாரத் திணைக்களத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இவ்வருடம் முன்னூறு வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், வெளிநாடுகளுக்குச் செல்லும் விசேட வைத்தியர்கள் சிலர் மீண்டும் பணிக்குத் திரும்புவதில்லை எனவும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜே. விஜேசூரிய அங்கு தெரிவித்துள்ளார்.
2799 சிறப்பு மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்றும், தற்போது 2148 பேர் மட்டுமே உள்ளதாகவும், 651 பேர் பற்றாக்குறை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |