இந்தியாவின் 75 வது சுதந்திர தினம்: ஜல யோகாவின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள விழிப்புணர்வு(Video)
இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி ராமேஸ்வரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் இன்று (13) இரு கைகளிலும் தேசிய கொடியை ஏந்தி பாக் ஜலசந்தி கடலில் ஜல யோகா செய்து தொடர்ந்து 75 நிமிடம் மிதந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவின் சுதந்திர தினம்
இந்நிலையில், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் அருகே உள்ள படகு இல்லம் அமைந்துள்ள பாக் ஜலசந்தி கடலில் சுமார் 10 அடி ஆழத்தில் மிதந்தபடியே ராமேஸ்வரம் அடுத்த மெய்யம் புலி மீனவ கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சுடலை என்பவர் இரு கைகளிலும் தேசிய கொடியை ஏந்தி கடலில் ஜல யோகா செய்து 75வது சுதந்திர தினம் என்பதால் தொடர்ந்து 75 நிமிடம் மிதந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இரு கைகளில் தேசிய கொடியுடன் கடலில் மிதந்தவாறு யோகாவில் ஈடுபட்ட இவரது முயற்சியை அப்பகுதி மக்களும், கடற்றொழிலாளர்களும் உற்சாகபடுத்தி பாராட்டியுள்ளனர்.
சமூக ஆர்வலரின் கருத்து
“இந்திய நாட்டின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி சமூக ஊடங்களில் ஆகஸ்ட் 15ஆம் திகதி வரை தேசிய கொடியை முகப்பு படமாக வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் தான் நான் இன்று கடலில் 75 நிமிடம் தொடர்ந்து மிதந்து
விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், நாட்டு மக்கள் இடையே ஒற்றுமை உணர்வு வளர
வேண்டும் என அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்கிறேன்”என கூறியுள்ளார்.